கோபன்ஹேகன்: டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகன் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாகவும். இதில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்த நாட்டு காவல் துறை தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறது.
இந்த துப்பாக்கிச் சூடு ஃபீல்ட்ஸ் ஷாப்பிங் சென்டர் என்ற வணிக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். தற்போது அங்கு பலத்த அளவில் காவல் படையினர் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தாக்குதலுக்கான பிரதான காரணம் என்ன என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை.
குழந்தையை சுமந்தபடி வணிக வளாகத்தில் இருந்து வெளியேறும் பெண், ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு ஸ்ட்ரெச்சர் மூலம் காயம் பட்டவர்களை மீட்டு செல்லும் சுகாதார பணியாளர்கள், ஆயுதம் ஏந்தி நிற்கும் போலீசார் போன்ற படங்கள் வெளியாகி உள்ளன.
“ஃபீல்ட்ஸில் அதிபயங்கரமான துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் அல்லது இறந்துள்ளனர் என்பது எங்களுக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை” என தெரிவித்துள்ளார் கோபன்ஹேகன் மேயர் சோபி ஆண்டர்சன்.
முதல் துப்பாக்கி குண்டு சத்தம் கேட்ட போது நூற்றுக்கணக்கான மக்கள் வணிக வளாகத்தின் வாசல் பகுதியில் விரைந்ததாக தெரிவித்துள்ளார் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர். தாக்குதலால் பாதிப்புக்கு ஆளான 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த வணிக வளாகத்தில் 135 கடைகள், உணவகங்களும் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.