”தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று அரசாணை வெளியிட்டு அரசு ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில்தான், சமீபத்தில் வெளியான 10-ம் வகுப்பு தேர்வு முடிவில் 47,000 மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர். இது தமிழ்நாட்டையே தலைகுனிய வைத்திருக்கிறது. இதுவரை தமிழ் மொழியில் தோல்வி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கை இவ்வளவு அதிகமானது, இதுவே முதல்முறை.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் ஆண்டுதோறும் மாணவர்களின் தோல்வி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருவதற்கு புள்ளிவிவரங்களே ஆவணமாய் இருக்கின்றன. 2017-ம் ஆண்டு 31,625 மாணவர்களும் 2018-ம் ஆண்டு 33,707 மாணவர்களும் தோல்வி அடைந்திருக்கிறார்கள். 2019-ம் ஆண்டு இது 36,108-ஆக அதிகரித்திருக்கிறது. 2020, 2021 ஆண்டுகளில் கொரோனா காரணமாக தமிழக அரசு அனைவருக்கும் ஆல் பாஸ் கொடுத்துவிட்டது. தற்போது, வெளியான தேர்வு முடிவுகளிலும் தமிழ்ப் பாடத்தில் தோல்வியுற்றவர்களின் எண்ணிக்கை 47,000-ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 2019-ம் ஆண்டைவிட இப்போது 11 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக தமிழில் தோல்வியடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வெழுதிய 9,12,620 மாணவர்களில் 8,21,994 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் இதற்கு முந்தைய வருடங்களின் தேர்ச்சி விகிதங்களை விட குறைவுதான். 2018-ம் ஆண்டு 94.5 சதவிகிதமும், 2019-ம் ஆண்டு 95.2 சதவிகிதமும் தேர்ச்சி இருந்தது. 2020, 2021 ஆண்டுகளில் கொரோனா காரணமாக 100 சதவிகித தேர்ச்சி அடைந்த தமிழ்நாடு, இந்த ஆண்டு 90.1 சதவிகிதம்தான் தேர்ச்சி அடைந்துள்ளது.
பாடவாரியாக எடுத்துக்கொண்டால் இந்த ஆண்டு கணிதத்தில் 90.80 சதவிகிதமும், சமூக அறிவியலில் 91.86 சதவிகிதமும், அறிவியலில் 93.67 சதவிகிதமும் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இந்த மூன்று பாடங்களை ஒப்பிட்டால் தமிழ்ப் பாடத்தின் தேர்ச்சி விகிதம் அதிகம்தான். 94.84 சதவிகிதம் தேர்ச்சி வந்திருக்கிறது. பிறகு ஏன் தமிழில் தோல்வியடைந்த எண்ணிக்கையை மட்டும் கேள்விக்குட்படுத்த வேண்டும் என்று தோன்றலாம். தமிழ் நம் தாய்மொழி என்பதுதான் காரணம். 47 ஆயிரம் பேரின் தோல்வி தமிழார்வலர்களுக்கு அதிர்ச்சியூட்டியுள்ளது.
இதற்கு பல்வேறு காரணங்களை அடுக்குகிறார், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
“பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாகவும் ஆசிரியர் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை அனைத்துப் பாடங்களையும் பொது ஆசிரியர்கள்தான் நடத்துகிறார்கள். தொடக்கப் பள்ளிகளில் மொழி ஆசிரியர் என்று தனியாக இல்லை. மொழிப்பாடத்தில் தொடங்கி உடற்கல்வி வகுப்புகள், பள்ளியின் அலுவல் சார்ந்த பணிகள் எனப் பல்வேறு பணிகளை ஆசிரியர்களே செய்கிறார்கள். ஆசிரியர்களின் இந்தப் பணிச்சுமை கற்றல், கற்பித்தல் செயல்பாட்டைத்தான் பாதிக்கும். தொடக்கப் பள்ளியில் அலுவல் பணிகளுக்காக ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் போன்றோர்களை அரசு நியமிக்கவேண்டும். தொடக்கக் கல்வியில் வலுவாக மொழிப்பாடத்தை நடத்தவில்லை என்றால் அது உயர்கல்வியில் பாதிப்பு ஏற்படுத்தும்.
47 ஆயிரம் பேர் எப்படித் தோல்வியடைந்தார்கள் என்பதையும் கடந்த 30 ஆண்டுகால தேர்வு முடிவுகளையும் ஆய்வு செய்யவேண்டிய பொறுப்பு பள்ளிக் கல்வித்துறைக்கு உள்ளது. அரசும் சமமான கற்றல் வாய்ப்புக்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரவேண்டும். தாய்மொழி மூலம் கல்வியைக் கொடுக்காமல், மொழியாசிரியர் பணியை உருவாக்காமல், ஆங்கிலவழிப் பள்ளி என்று அரசுப் பள்ளியிலேயே தொடங்கி இருப்பது நியாயமற்ற அணுகுமுறை. தமிழ்ப் பாடத்தில் இத்தனைப் பேர் தோல்வியடைந்திருப்பதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வரும் ஆண்டுகளில் மொழிப் பயிற்சி, மொழிக்கான சிறப்பு ஆசிரியர்கள், மொழிக்கூடங்கள் போன்றவற்றைத் தொடக்கத்திலிருந்து எல்லா மட்டத்திலும் அரசு உருவாக்க வேண்டும்” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
“தாய்மொழியான தமிழ் மொழியில் இத்தனை மாணவர்கள் தோல்வி அடைய என்ன காரணம்?” என்று தமிழக தமிழாசிரியர் கழக மாநிலப் பொறுப்பாளர் கங்காதரனிடம் கேட்டோம்.
“கொரோனாவால் ஓராண்டுக்கும் மேலாக மாணவர்கள் பள்ளிக்கு தொடர்பில்லாமல் இருந்தார்கள். பள்ளி திறந்தபிறகு அவர்களால் சரியாகப் படிக்க முடியவில்லை. அந்த ஆர்வமே குறைந்திருந்தது. வீட்டிலேயே இருந்ததால் காட்சி ஊடகங்களுக்கும் அலைபேசிக்கும் அடிமையாகிவிட்டனர். அவர்களுக்கு எழுதப் படிக்க சிரமமாக இருந்தது. வாசிப்புப் பழக்கம் வெகுவாகக் குறைந்திருந்தது. ஐந்து பாடங்களில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழ்ப் பாடம்தான். கொரோனா காலகட்டம் என்பதால் தமிழில் எழுதப் படிக்கக் கொடுக்கப்படும் பயிற்சிகளைக் கொடுக்க முடியவில்லை என்பதுதான் முதன்மையான காரணம்.
கொரோனாவால் வேலையிழந்த குடும்பங்கள் அதிகம். மாணவர்கள் வேலைக்குச் செல்லக்கூடிய சூழல் இருந்திருக்கும். புறச்சூழலும் அவர்களைப் பாதித்திருக்கும். கொரோனாவால் இரண்டு வருடம் தேர்வு நடக்கவில்லை என்பதால், இந்த வருடமும் நடக்காது என்று படிக்காமல் இருந்திருக்கலாம். அப்படியே, தேர்வு இருந்தாலும் ஆல் பாஸ் போட்டு விடுவார்கள் என்று நம்பியிருக்கலாம். அனைத்திற்குமே கொரோனாதான் காரணம்” என்கிறார் கங்காதாரன்.
“இதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட கேள்வித்தாளுக்கும் இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட தமிழ் கேள்வித்தாளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நிறைய மாற்றம் செய்திருந்தார்கள். அதன் மாதிரிக் கேள்வித்தாளும் ஆசிரியர்களுக்குத் தெரியாது. மேலும், பள்ளிக்கான வருகைப் பதிவேடு 75 சதவிகிதம் இருக்கவேண்டும். ஆனால், இந்த வருடம் வருகைப் பதிவேடு இருந்தால்தான் தேர்வெழுத முடியும் என்பதைச் சொல்லவில்லை. பள்ளிக்கு வராமல் இருந்த மாணவர்களின் பெயர்களும் தேர்வு எழுதுவோர் பட்டியலில் இருந்தது. அவர்கள் தேர்வை எழுதினார்களா என்பதும் தெரியாது. பள்ளி நடைபெற்றதே குறைந்த நாள்கள்தான். அதிலேயே, அரையாண்டு தேர்வின்போது 15 நாள்கள் விடுமுறை அளித்தார்கள்.
இந்த வருடம் தேர்வெழுதியவர்கள் நேரடியாக 8-ம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்புக்கு வந்தவர்கள். இத்தனைப் பேர் தோல்வியடைந்ததற்கு அதுவும் ஒரு காரணம். மிக முக்கியமாக வீட்டிலேயே அடைந்திருந்ததால் வெளியில் வருவதற்கே மாணவர்கள் பயந்தார்கள். எங்கள் அமைப்பு சார்பாக மாணவர்களுக்கு முதலில் உளவியல் ரீதியாக பயிற்சி கொடுக்கவேண்டும் என்று கல்வித்துறைக்குக் கோரிக்கை வைத்தோம். அதனையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லை” என்கிறார், குழந்தை நேயப் பள்ளிகள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளரும் தமிழ் ஆசிரியருமான தமிழ் ஆசான்.
இதுகுறித்து, கருத்து கேட்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை தொடர்புகொண்டோம். மூன்று நாள்களாக ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது. பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்ஸை தொடர்புகொண்டோம். மெசேஜ் அனுப்பினோம். பிஸி என்றே வந்தது. அதன்பிறகு, அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மாவிடம் கேட்டோம். “இதுகுறித்து நான் பதில் சொல்லமுடியாது. ஆனால், 10-ம் வகுப்புத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்தவர்கள் 99 பேர்தான். மற்ற தகவல்களை நீங்கள் ஆணையரிடம்தான் கேட்கவேண்டும்” என்றார்.
“தமிழ்ப் பாடத்தில் மட்டும் தோல்வியடைந்தவர்கள் 99 பேர்தான். 47 ஆயிரம் பேர் தோல்வி அடைந்துள்ளனர் என்பதும் உண்மைதான். ஆனால், 99 பேரைத் தவிர்த்து மற்றவர்கள் தமிழ் மட்டுமல்லாமல் மற்றப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளார்கள். இதனையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். கொரோனா சூழலால் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 90.1 சதவிகிதம் என்பது குறைவானதுதான். தேர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும்போது தோல்வியடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தானே இருக்கும்” என்கிறார்கள் நாம் விசாரித்த தேர்வுத்துறை அதிகாரிகள்.
`தமிழ் வாழ்க’ என்று அரசு அலுவலகங்களில் பெரிது பெரிதாக விளம்பரப் பலகைகள் வைத்தால் மட்டும் போதாது. பள்ளிகளிலும் தமிழை நாம் வாழ வைக்க வேண்டும்.