திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். கொரோனா தொற்றுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் நீண்ட நேரத்திற்கு பிறகே பக்தர்கள், சுவாமியை தரிசிக்க முடிகிறது. அதன்படி சனிக்கிழமையான நேற்று இலவச தரிசன வரிசையில் 15 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் 88,026 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 50,652 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ₹4.34 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.இதையடுத்து நேற்றிரவு முதல் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்தது. இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 32 அறைகள் நிரம்பியுள்ளது. இதன்காரணமாக சுமார் 3 கி.மீ. தூரம் உள்ள ராம்பகிதா காட்டேஜ் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 கட்டண டிக்கெட் பெற்றவர்கள் 3 அல்லது 4 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.