திருப்பூரில் இந்திய சமூக விஞ்ஞானக் கழகத்தின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. வழக்கறிஞர் எஸ்.கண்ணன் தலைமை வகித்தார். இதில், ‘சட்டத்தின் ஆட்சியும், சமீபத்திய தீர்ப்புகளும்’ என்ற தலைப்பில், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பேசியதாவது:
நமது அரசியலமைப்புச் சட்டத்தில்ஒருவர் எந்தத் துறையையும், எந்த அரசையும், யாரையும் விமர்சிப்பதற்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நீதிமன்றம் ஆகியவையும் விமர்சனத்துக்கு உரியதுதான். சட்டம் அநியாயமானது என்றால், அதற்கு எதிராக போராடுவது தான் ஒரே வழி. ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் உரிமை தான், நீதிபதிக்கும் உள்ளது. அவர்கள் சட்டத்திலிருந்து விலக்குப் பெற்றவர்கள் அல்ல. நம் உரிமையை நாம் தான் போராடி பெற வேண்டும். இது ஒவ்வொருவரின் சமூகக் கடமை. இவ்வாறு அவர் பேசினார்.
‘நிதிப் பங்கீட்டில் ஜிஎஸ்டி’ எனும் தலைப்பில் பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா பேசியதாவது: பணமதிப்பு இழப்பை தொடர்ந்து கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டியால், ஒட்டுமொத்த நாட்டின் தொழில்துறை, பொருளாதாரத்தில் சிறு, குறு தொழில்கள், சிறு, குறு விவசாயம்ஆகியவற்றுக்கு இடம் இல்லாமல்போனது, முழுக்க, முழுக்க பெருநிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. நேரடி வரி விதிப்பில் எப்போதும் மத்திய அரசு தான்ஆதிக்கம் செலுத்துகிறது.
அதேசமயம் மறைமுக வரிமூலம், வருவாய் பெறுவதில்மாநிலங்களுக்கு இருக்கும் இடத்தை ஜிஎஸ்டி பறித்து விட்டது. ஒரு பக்கம் மறைமுகவரியை ஏற்றி மக்களை தாக்குவது, நேர்முக வரியை குறைத்து கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை காட்டுவது, வரி விதிக்கும் மாநில உரிமைகளை பறிப்பது தான் நடந்து கொண்டிருக்கிறது,’’ என்றார்.