Courtesy: வி.தேவராஜ்
சிங்கப்பூராக இருக்க ஆசைப்பட்ட இலங்கை இப்போது லெபனான் பாணியில் பயணிக்கின்றது.
மக்களின் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் எல்லை உண்டு.
இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வுக்கு தடைக் கல்
ராஜபக்சர்கள்
இலங்கையின் 22 மில்லியன் மக்கள் மீது திணிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி தற்போது
மனிதாபிமான நெருக்கடியாக மாறிவிட்டது.
சிங்கப்பூராக இருக்க ஆசைப்பட்ட ஒரு நாடு
இப்போது லெபனான் பாணியில் வீழ்ச்சியை எதிர்நோக்கி உள்ளது.
நாளை என்ன நடக்கும்
என்பது குறித்த அச்சத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
மக்கள் வரிசைகள் நீடிப்பது விலைவாசி உயர்வு அத்தியாவசியப் பொருட்கள்
கிடைக்காமல் போவது போன்றவற்றால் நாட்டில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து
மோசமாகி வருகிறது.
மக்கள் பட்டினியில்
நாட்டின் பெரும்பாலான மக்கள் பட்டினியை நோக்கி மிக வேகமாகத் தள்ளப்படுகின்றனர்.
51 பில்லியன் டொலருக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடன்கள் இருப்பதாக
மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் டொலர் கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்குக்
குறைந்துள்ளது.
இன்றைய நிலையில் இலங்கைக்கு தேவைப்படுவது பொறுப்புமிக்க அரசாங்கமும் நிலையான
சர்வதேச முதலீடுமாகும்.
ஒருகாலத்தில் இலங்கையின் மிக முக்கியமான இருதரப்பு
பங்காளியாக இருந்த பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய ‘குவாட்
நாடுகளுடன்’ இணைந்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கும் சீனாவின் மீதான முதலீட்டு
சார்புக்கு ஒரு ஒத்திசைவான போட்டியான மாற்று வழியை வழங்குவதற்கும் அவசர
இடையீட்டு நிதியை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அது நடைமுறைக்கு
வருவதாகத் தெரியவில்லை.
பொருளாதார மீட்சித் திட்டம்
அதேவேளையில் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு ஆறு
வாரங்களுக்கு மேலாகியும் அவர்களது கைகளில் பொருளாதார மீட்சித் திட்டம் குறித்து
எதுவும் இல்லை.
குறிப்பாக மக்கள் பார்வையில் ஆட்சியாளர்கள் வெறும் ஆரூடம்
கூறும் ஜீவன்களாகவே தெரிகின்றனர்.
மக்கள் மற்றும் குறிப்பாக பிள்ளைகளின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது என்று யுனிசெப்
பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.
அவரது கூற்றுப்படி தெற்காசியாவிலேயே
ஊட்டச்சத்தின்மையில் இலங்கைப் பிள்ளைகள் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.
இந்தச்
சிறுவர்கள் நாட்டின் எதிர்கால சொத்து. தற்போதய ஆட்சியாளர்கள் போதுமான
மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் தவறினால்
நாடு குழப்பமாகவும் அராஜகமாகவும் மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு இன்று தேவைப்படுவது பொறுப்புமிக்க அரசாங்கமும் நிலையான சர்வதேச
முதலீடுமாகும். இந்த இரண்டுமே இப்போது இலங்கையில் இல்லை.
துரதிஷ்டவசமாக
ராஜபக்ஷக்களும் அவரது அரசியல் பங்காளர்களும் அதிகாரத்தில் தம்மை
உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் தெடர்ந்தும் தமது ஆட்சியை நிலை நிறுத்துவதற்குமான
நகர்வுகளையுமே மேற்கொண்டு வருகின்றனர்.
தோல்வியடைந்த தலைவர்
நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் தீர்மானங்களினால் உருவாகிய
தவறுகளுக்காகவும் மன்னிப்புக்கோரிய போதும் மக்கள் வழங்கிய ஆணைக்கேற்ப பதவியை
விட்டு விலகப் போவதில்லை அதாவது தோற்றுப்போன ஜனாதிபதியாக வெளியேறப் போவதில்லை
என்று கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது ‘தோற்றுப் போன நாட்டை’
மக்களுக்கு வழங்கிய நிலையிலும் ராஜபக்சர்களின் ஆட்சியை கொண்டு நடத்தவே
திடசங்கற்பம் பூண்டுள்ளனர் என்பதையே காட்டுகின்றது.
அதாவது தோல்வியடைந்த
தலைவராக வெளியேற முடியாது என்ற அடிப்படையில் ஜனாதிபதி தயக்கமின்றி பதவியில்
தொடர்ந்தும் இருக்கிறார்.
இது பொதுவான அரசியல் தர்மம் மற்றும் அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட
நியாயப்படுத்தலாகும்.
இவ்வாறான வழிவகைகள் முலம் ஜனாதிபதி தன்னையும்
ராஜபக்ஷக்களையும் மீட்க முடியும் என்று நம்புகின்றாரா? அல்லது
நாட்டைமீட்டு விடுவேன் என்று சபதம் செய்கின்றாரா? ஆனால்இரண்டுமே நடைமுறை
சாத்தியமற்றது என்பதை காலம் விரைவில் உணர்த்தும்.
மொத்தத்தில் இலங்கை இன்று எதிர் கொண்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும்
பொருளாதார நெருக்கடி இரண்டுமே தீர்வின்றி தொடர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச
குறிப்பாக ராஜபக்ச குடும்பத்தினர் காரணமாகவும் தடைக் கற்களாகவும் உள்ளனர்.
எனவேதான் இலங்கையின் நான்கு மகாநாயக்க பீடங்களும் ஜனாதிபதி கட்சி அரசியலைக்
கைவிட்டு பொருளாதார நெருக்கடிக்கு உரிய தீர்வினைக் காண வேண்டும் என்றும்
வலியுறுத்தியுள்ளனர்.
பௌத்தபீடங்கள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அவசர கடிதம்
இலங்கையின் நான்கு முக்கிய பௌத்த பீடங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு 10
அம்சக் கோரிக்கைகள் அடங்கிய அவசரக் கடிதமொன்றை அனுப்பி வைத்தள்ளனர். அந்தக்
கடிதத்தில்
1. மகாநாயக்கர்கள் கூட்டாக 6 மாதகாலத்திற்கு நேர்மையான சர்வ கட்சி
அரசாங்கத்தைக் கோருகின்றனர்
2. அல்லது ஒரு நடு நிலையானவரை தேசியப் பட்டியலுக்கூடாக கொண்டுவந்து
இடைக்கால அரசாங்கத்தை நடத்துமாறு முன்மொழிகின்றனர்
3. அதற்கு பக்க பலமாக நிபுணத்துவக் குழுவை அமைத்து இடைக்கால அரசை
கொண்டு நடத்தமாறு கோருகின்றனர்.
4. அல்லது நாட்டின் தலைவிதியை மக்களின் தீர்ப்புக்கு விடுமாறும்
அழைப்பு விடுக்கின்றனர்.
5. 22 வதுஅரசியல் திருத்தச் சட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்துக.
6. ஜனாதிபதி கட்சி அரசியலைக் கைவிட்டு பொருளாதார நெருக்கடிக்கு உரிய
தீர்வினைக் காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்
7. அத்துடன் இலங்கை தோல்வி அடைந்த நாடாக மாறியுள்ளதாகவும் மகாநாயக்க
நான்கு பீடங்களும் அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செவி சாய்ப்பாரா என்பது குறித்து தெரியவில்லை.
வேலைத் திட்டம் இன்றி எதிர்க் கட்சிகள்
தென்னிலங்கை மாற்றுத் தலைமை இன்றி தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
இன்றைய நெருக்கடிக்குள் தேர்தல் வந்தால், அதிகாரத்தை மக்கள் அப்படியே தூக்கி
தமக்கு வழங்கி விடுவர் என எதிர்க் கட்சிகள் நினைக்கின்றன.
ஆனால் எவ்வித வேலைத்
திட்டமும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. வெறும் கையுடனேயே எதிர்க்
கட்சிகள் உள்ளன.
ஜே.வி.பி உட்பட சஜித் பிரேமதாச அடங்களாக இன்றைய நெருக்கடியை கையாள என்ன உபாயத்தை
வைத்திருக்கின்றனர் என்பதை அவர்கள் மக்கள் முன்வைக்க வேண்டும்.
மொத்தத்தில் நாட்டின் பொருளாதார நெருக்கடி மனிதாபிமான நெருக்கடியாக மாறி
மக்களை பட்டினி நோக்கி விரைந்து தள்ளுவதானது பொதுமக்களின் கோபத்தின் மற்றொரு
கொடிய பேரலைக்கு அரசாங்கம் அழைப்பு விடுப்பதாகவே அமைகின்றது.
ஏனெனில் மக்களின்
பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் எல்லை உண்டு. இன்றைய சூழ் நிலையில் மக்கள்
தமது தலைவிதியை தாமே தீர்மானித்தாக வேண்டும் என்ற நிலையில் களத்தில்
இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கட்டுரை- வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்