நுபுர் சர்மாவின் பேச்சை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கண்டித்தது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று மத்திய சட்டதுறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இறைதூதர் முகமது நபிகள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நுபுர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த், நுபுர் சர்மாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் ”நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார். உதய்பூரில் நடந்த கொலைக்கு நுபுர் சர்மாவின் பொறுப்பற்ற பேச்சுதான் காரணம். அவரது செயல்பாடுகளால் நாட்டில் இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
அவரது தொலைக்காட்சி விவாதம் கண்டனத்துக்குரியது. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அது தொடர்பாக நுபுர் சர்மா எப்படி வெளியில் பேச முடியும்?
அவர் பொறுப்பற்ற முறையில் பேசியதால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?” என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கருத்து குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளிக்கும்போது, “முதலில் ஒரு சட்ட அமைச்சர் என்ற முறையில் உச்ச நீதிமன்றத்தின் கருத்து குறித்து கருத்து தெரிவிப்பது சரியான முறையல்ல. மேலும், இது வெறும் வாய்மொழி கருத்துதான்.தீர்ப்பு அல்ல.
இந்த தீர்ப்பில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் நான் இது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. இப்பிரச்சனை குறித்து சரியான இடத்தில் விவாதிப்போம்” என்று தெரிவித்தார்