மும்பை: மகாராஷ்டிர பேரவைத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராகுல் நர்வேகர் வெற்றி பெற்றார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அணி தலைவரான ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு அசாமில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கினார். இதையடுத்து பேரவையில் பலத்தை நிரூபிக்குமாறு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, ஆளுநர் பி.எஸ். கோஷ்யாரி உத்தரவிட்டார்.
ஆனால் அதற்கு முன்னதாகவே முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இந்நிலையில் பாஜக கூட்டணியின் சார்பில் மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியில் அமர்ந்துள்ளார். துணை முதல்வராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தலைவர் பதவி ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் பேரவைத் தலைவராக இருந்த நானா படேல் ராஜினாமா செய்து, மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து சட்டப்பேரவைக்கு துணை தலைவராக இருந்த நர்ஹரி ஜிர்வால் கூடுதல் பொறுப்பேற்று அந்தப் பதவியை தொடர்ந்து வகித்து வருகிறார்.
புதிய அரசு ஜூலை 4-ம் தேதி பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து, சட்டப் பேரவைத் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த கூட்டணி அரசு தரப்பில், மகாராஷ்டிரா பேரவைத் தலைவர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் போட்டியிட்டார். அவருக்கு எதிராக உத்தவ் தாக்கரே தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகியவை இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி தரப்பில், சிவசேனா எம்எல்ஏ ராஜன் சால்வி போட்டியிட்டார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவை சபாநாயகராக 164 வாக்குகள் பெற்று பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவசேனாவின் ராஜன் சால்வி 107 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
ராகுல் நர்வேகர் மும்பையின் கொலாபா தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக உள்ளார். இவர் என்சிபி மூத்த தலைவர் ராம்ராஜே நாயக் நிம்பல்கரின் மருமகன் ஆவார்.
சிவசேனாவின் ஆரம்ப காலத்தில் இளைஞர் பிரிவின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். அவர் கட்சியில் இருந்து விலகி 2014 இல் தேசியவாத காங்கிரஸில் சேர்ந்தார். ராகுல் நர்வேகர் 2014 மக்களவைத் தேர்தலில் மாவல் தொகுதியில் போட்டியிட்டு சிவசேனாவின் ஸ்ரீரங் அப்பா பார்னேவிடம் தோல்வியடைந்தார். பின்னர் 2019-ல் பாஜகவில் இணைந்தார்.
இதன் மூலம் பாஜக கூட்டணி முதல் தேர்வில் வெற்றி பெற்றுள்ளது. சிவசேனாவில் இருந்து பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் கூட்டணி அமைத்து புதிய அரசு அமைந்த பிறகு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கவுள்ளார்.