பாலியல் புகார் நடிகரின் ஜாமினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடிய நடிகை

மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான விஜய்பாபு மீது கடந்த ஏப்ரல் 22ம் தேதி மலையாள துணை நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்தார். அதை மறுத்த விஜய்பாபு சோசியல் மீடியாவில் சம்பந்தப்பட்ட நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தினார். இந்த இரண்டு காரணங்களுக்காக விஜய்பாபு மீது போலீஸார் வழக்குப் பதிந்த நிலையில் போலீசாரிடம் கைதாவதை தவிர்க்க வெளிநாடு தப்பிச்சென்று தலைமறைவானார் விஜய்பாபு. அங்கிருந்தபடியே நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்க, அவர் கேரளா திரும்பினால் மட்டுமே ஜாமின் மனு குறித்து பரிசீலிக்கப்படும் என நிபந்தனை விதித்தது நீதிமன்றம்.

இதை தொடர்ந்து கேரளா திரும்பிய அவர் விசாரணை அதிகாரிகள் முன் ஆஜரானார். அதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் அளித்தது. அதேசமயம் விசாரணை அதிகாரிகள் முன் ஜூலை 3ம் தேதி வரை தினசரி ஆஜராக வேண்டும் என்றும் வெளிநாடு எங்கும் செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டது. இந்த நிலையில் அவருக்கு ஜாமின் வழங்கியது பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நடிகையின் தந்தை தனது விமர்சனத்தையும் முன்வைத்திருந்தார்.

இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக கேரள அரசு நடிகரின் ஜாமினை ரத்து செய்யக்கோரி நான்கு நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது எதிர்பாராத ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், போலீசாரின் பிடியில் அகப்படாமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றது அரசின் மீது ஒரு களங்கத்தை ஏற்படுத்தி விட்டதால் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது கேரள அரசு. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நடிகையும் தற்போது நடிகரின் ஜாமின் மனுவை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சம்பந்தப்பட்ட நடிகர் ஜாமினில் வெளியே இருந்தால் சாட்சியங்களையும் தடயங்களையும் கலைத்துவிட வாய்ப்புண்டு என்று கூறி அவரது ஜாமினை ரத்து செய்யும்படி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.