புதுடெல்லி: மத்திய அரசு செயல்படுத்தும் பிரதமர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு உலக வங்கி 175 கோடி டாலர் (ரூ.13,834.54 கோடி) கடனுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 100 கோடி டாலர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கும் 75 கோடி டாலர் மேம்பாட்டு திட்டப் பணிகளுக்கும் வழங்கப்படுகிறது. இத்தகவலை இந்தியாவுக்கான உலக வங்கி இயக்குநர் ஹைதெகி மோரி தெரிவித்துள்ளார்.
தனியார் முதலீடுகள் குறைந்துள்ள சூழலில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க 75 கோடி டாலரை முதலீட்டு திட்டப் பணிகளில் முதலீடு செய்ய கடனாக அளிப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
பிரதமர் ஆயுஷ்மான் பாரத் திட்டம் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பொது சுகாதார கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். குறிப்பாக ஆந்திரா, கேரளா, மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் முன்னுரிமை திட்டப் பணிகளுக்கு இதில் நிதி ஒதுக்கப்படும்.
இந்தியாவின் சுகாதார திட்ட செயல்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. இதனால் மக்களின் வாழ்நாள் 69.8 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் இறப்பு விகிதம், முதியோர் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. இவை அனைத்தும் உரிய மருத்துவ கவனிப்பு, தடுப்பூசி போடப்பட்டது, சுகாதார மேம்பாடு ஆகியவற்றினால் சாத்தியமாகியுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
வலுவான சுகாதார கட்டமைப்பு வசதிகள் இருந்ததால்தான் கரோனா வைரஸ் தொற்றை சமாளிக்க முடிந்தது. இதை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம். தரமான மருத்துவம் ஒருங்கிணைந்த வகையில் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த அதற்குரிய நிதி ஆதாரங்களும் அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று காலத்தில் சுகாதார கட்ட மைப்பை மேலும் வலுவாக்க வேண்டியதன் அவசியத்தை அரசு உணர்ந்து நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்ததாக ஹைதெகி மோரி குறிப்பிட்டார்.
கரோனா பரவுவதற்கு முன்பே சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த போதிய நிதியை இந்திய அரசு ஒதுக்கி செயல்படுத்தியது. இதை மேலும் வலுப்படுத்த இந்த நிதி உதவும் என்று கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
பெருந்தொற்று தயார் திட்டம் (பிஹெச்எஸ்பிபி) இந்தியாவில் வைரஸ் தொற்று பரவலைக் கண்காணிக்க பெரிதும் உதவியது. அத்துடன் வைரஸ் பரவலின் தன்மை அதன் தீவிரத்தைக் கண்டுபிடித்து மருந்து கண்டுபிடிக்கவும் உதவியாக இருந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக அனைவருக்குமான வங்கிச் சேவை மற்றும் பங்குச் சந்தைகளில் ஸ்திரமான நிலை உள்ளிட்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இவற்றின் காரணமாகத்தான் கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க முடிந்தது என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க அரசு ஒப்புக் கொண்ட இலக்கை எட்ட நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.5 சதவீதம் செலவிட வேண்டியுள்ளதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
கரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டு வரவும், சுகாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்த கடனுதவி வழங்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.