BJP’s Rahul Narwekar elected as Maharastra speaker: மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் சபாநாயகராக பா.ஜ.க.,வைச் சேர்ந்த ராகுல் நர்வேகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் கோவாவில் இருந்து சனிக்கிழமை மும்பை திரும்பிய நிலையில், சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் மாநில சட்டப்பேரவையின் இரண்டு நாள் சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
இதில், சபாநாயகர் பதவிக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது, இதில் பாஜகவின் ராகுல் நர்வேகர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவசேனா எம்.எல்.ஏ ராஜன் சால்வியை மகா விகாஸ் அகாடி சபாநாயகர் வேட்பாளராக நிறுத்தியது.
இதையும் படியுங்கள்: சரவணா ஸ்டோர்ஸின் ரூ235 கோடி; லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.178 கோடி சொத்துக்கள் முடக்கம்
தேர்தலில், பா.ஜ.க.,வின் ராகுல் நர்வேகர் 164 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க, சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே அணி மற்றும் சிறு கட்சிகள் இணைந்து கொலாபா எம்.எல்.ஏ ராகுல் நர்வேகருக்கு 164 வாக்குகள் அளித்து சட்டசபை சபாநாயகர் பதவிக்கு தகுதி பெற வைத்தன.
அதேநேரம், பா.ஜ.க வேட்பாளர் ராகுல் நர்வேகருக்கு எதிராக சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) வாக்களிக்கவில்லை. அதன் எம்.எல்.ஏ.,க்கள் அபு ஆஸ்மி மற்றும் ரயீஸ் ஷேக் இருவரும் தலை எண்ணும் போது அமர்ந்திருந்தனர்.
சபாநாயகர் பதவிக்கு போட்டியிட்ட ராஜன் சால்விக்கு எம்விஏ கூட்டணியில் உள்ள சிவசேனா, என்சிபி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் 107 வாக்குகள் கிடைத்தன.
இதற்கிடையில், ஏ.ஐ.எம்.ஐ.எம் வாக்களிக்காமல் புறக்கணித்தது.
164 வாக்குகள் பெரும்பான்மையுடன் பா.ஜ.க.,வின் ராகுல் நர்வேகர் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து, சிவசேனா-பாஜக அரசு ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் சிறப்பு இரண்டு நாள் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது ஜூலை 4 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும்.
மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தலை எண்ணிக்கையின் போது, சிவசேனாவின் யாமினி யஷ்வந்த் ஜாதவ் தலை எண்ணிக்கையை பதிவு செய்தபோது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் “ED,ED” (அமலாக்கத்துறை) என்று கோஷமிட்டனர்.
ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் குழுவில் இணைந்த முக்கிய சிவசேனா எம்.எல்.ஏ., யாமினி, அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) மீறல்கள் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டு வரும் பிரஹன்மும்பை மாநகராட்சியின் (பிஎம்சி) நிலைக்குழுவின் முன்னாள் தலைவர் யஷ்வந்த் ஜாதவின் மனைவி. அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு முன்னதாக, வருமான வரித்துறை அதிகாரிகளும் இந்த ஆண்டு தொடக்கத்தில் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் பாந்த்ராவில் உள்ள ஜாதவ்களுக்கு சொந்தமான ஒரு பிளாட் மற்றும் யஷ்வந்துடன் தொடர்புடைய 40 சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.
சட்டப்பேரவை அமர்வுக்கு முன்னதாக, சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் விதான் பவனில் உள்ள சட்டமன்ற கட்சி அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.