மும்பையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மழையால் 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
கல்பாதேவி மற்றும் சயானில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இன்றும் மும்பையில் ஆங்காங்கே கனமழை பெய்தது. இதனால் மும்பையின் உயிர் நாடியாகக் கருதப்படும் புறநகர் ரயில் சேவையில் சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. அதோடு மும்பையின் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியதால் 12 வழித்தடங்களில் பெஸ்ட் பஸ்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
மாநகராட்சி ஊழியர்கள் மும்பை முழுவதும் உஷார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர். அதோடு மழை நீர் தேங்கும் பகுதியில் தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்ற மோட்டார்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மழையால் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவை எடுத்துக்கொண்டு சரியான நேரத்திற்கு செல்ல முடியாத வகையில் சாலைகளில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் மும்பையில் டெலிவரி பாய் ஒருவர் வழக்கமாக செல்லும் இரு சக்கர வாகனத்தில் செல்லாமல் குதிரையில் சென்று உணவை டெலிவரி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி இருக்கிறது. மழையை பொருட்படுத்தாது உணவை டெலிவரி செய்த அந்த நபரை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.