யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்க கோரி அதிமுக தலைமையை ராகுல் காந்தி தொடர்பு கொள்ளவில்லை; காங்கிரஸ் அறிக்கை

டெல்லி: யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்க கோரி அதிமுக தலைமையை ராகுல் காந்தி தொடர்பு கொள்ளவில்லை என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ந்தேதி முடிவு அடைவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 18-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பழங்குடி இன தலைவரும், ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு (வயது 64) போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய நிதி மந்திரியான யஷ்வந்த் சின்கா (84) களம் இறக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் திரவுபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்கா இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் தாக்கல் முடிந்ததும், பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டத் தொடங்கி உள்ளனர். இந்த சூழலில் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்க கோரி அதிமுக தலைமையை ராகுல் காந்தி தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்க கோரி அதிமுக தலைமையை ராகுல் காந்தி தொடர்பு கொண்டதாக வெளியான தகவல் தவறானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த வேட்பாளரான யஸ்வந்த் சின்காவுக்கு ஆதரவு அளிக்குமாறு அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமிக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்ததாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. இது முற்றிலும் போலியானது மற்றும் தவறானது. அப்படி எந்த தொலைபேசி அழைப்பும் செய்யப்படவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி பலவீனப்படுத்த முயற்சிகள் நடக்கிறது. இதனை தாங்கும் அளவுக்கு கூட்டணி உறுதியாக உள்ளது’ என்று அதில் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.