‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 97-வது இடம் வகிக்கும் ஜூலே நீமையர் (ஜெர்மனி) 6-2, 6-4 என்ற நேர் செட்டில் உள்ளூர் வீராங்கனை ஹீதர் வாட்சனை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். 22 வயதான நீமையர் தனது அறிமுக விம்பிள்டன் தொடரிலேயே கால்இறுதியை எட்டி கவனத்தை ஈர்த்துள்ளார்.
மற்றொரு ஜெர்மனி வீராங்கனை தாட்ஜனா மரியா 5-7, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் முன்னாள் பிரெஞ்சு ஓபன் சாம்பியன் ஆஸ்டாபென்கோவுக்கு (லாத்வியா) அதிர்ச்சி அளித்து, கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக கால்இறுதிக்குள் தடம் பதித்தார். இந்த ஆட்டத்தில் இரண்டு முறை எதிராளியின் மேட்ச் பாயிண்ட் ஆபத்தில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்ட 34 வயதான தாட்ஜனா மரியா, இரண்டு குழந்தைகளின் தாயார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் லாரன்ஜோ சோனிகோவை (இத்தாலி) வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆட்டம் முடிந்ததும் சோனிகோவை வலைக்கு அருகே அழைத்து நடால் கோபத்தில் ஏதோ சில விஷயங்களை சொன்னார். பிறகு தான் அவ்வாறு நடந்திருக்கக்கூடாது என்று கூறி நடால் மன்னிப்பு கோரினார்.