புதுடெல்லி: நாட்டின் முதல் ஆளில்லா போர் விமான சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக நடத்தி உள்ளது. இது பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.ராணுவத்தில் பலம் வாய்ந்த அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ராணுவத்தில் ஆளில்லா போர் விமானங்களைக் கொண்டுள்ளன. போர் நடக்கும் சூழலில், இத்தகைய ஆளில்லா விமானங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உக்ரைன் போர் உலகிற்கு காட்டி உள்ளது. இதனால், இந்தியாவும் தனது சொந்த முயற்சியில் ஆளில்லா போர் விமானத்தை உருவாக்கும் பணியை முடுக்கி உள்ளது. இந்தியாவில் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில், ‘கதக்’ என்ற பெயரில் ஆளில்லா போர் விமானம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான மாதிரி விமானம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் சோதனை கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா ஏரோநாட்டிக்கல் சோதனை மையத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், முதல் ஆளில்லா போர் விமானம் பறக்கவிடப்பட்டு சோதனை செய்யப்பட்டது. விமானம் தரையிலிருந்து வானில் பறப்பது, வழிகாட்டிக்கான நடைமுறைகளை கையாள்வது, நடுவானில் பயணம் செய்வது, தானாக தரை இறங்குவது போன்ற சோதனைகள் வெற்றிகரமாக நடந்திருப்பதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஆயுதப்படைகளுக்கு சொந்தமான ஆளில்லா போர் விமானங்களை தயாரிப்பதில் புதிய மைல் கல்லாகும். இதன் மூலம், இன்னும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் போர்விமான மாதிரிகளை தயாரித்து சோதனை செய்ய டிஆர்டிஓ திட்டமிட்டுள்ளது. கதக் ஆளில்லா போர் விமானத்தின் முழுஅளவிலான மாதிரி இன்னும் 2 ஆண்டுகளில் சோதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.* கதக் ஆளில்லா போர் விமானம் ரேடாரில் சிக்காமல் பறக்கக் கூடியது.* இது 13 அடி நீள, 16 அடி அகல இறக்கைகள் கொண்டது. இதற்கு வால் கிடையாது.* இது தோராயமாக 1000 கிலே எடை கொண்டதாக இருக்கும்.* இதில் ஏவுகணைகள், வெடிகுண்டுகள் போன்றவை இறக்கையின் கட்டமைப்பிற்குள் வைக்கப்படும். துல்லியமாக தாக்கக் கூடிய ஆயுதங்களை ஏவக்கூடியதாக இவை இருக்கும்.