தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன் வளத்துறையின் மீன் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு பெரிய தொட்டிகளில் கட்லா, ரோகு, மிருகால் ஆகிய மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுகிறது. இந்தப் பண்ணையில் வளர்க்கப்படும் மீன்கள் 45 முதல் 50 நாட்கள் வளர்ந்த பிறகு, வைகை அணை, சோத்துப்பாறை, சண்முகாநதி, மஞ்சளாறு உள்ளிட்ட அணைகளில் வளர்ப்புக்காக விடப்படும். மேலும் தனியார் மீன் பண்ணைகளுக்கும் இங்கிருந்து மீன் குஞ்சுகள் விற்பனை செய்யப்படும்.
வைகை அணையில் மீன்பிடி தொழிலும் நடைபெறுகிறது. மீன்வளத்துறை சார்பில் நடைபெறும் இந்த மீன்பிடி தொழிலில் வைகை அணையை சுற்றியுள்ள 150 மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு 500 முதல் 700 கிலோ அளவிலான மீன்கள் பிடிக்கப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இயற்கையான முறையில் வளரும் வைகை அணை மீன்களுக்கு பொதுமக்களிடையே அதிகளவில் வரவேற்பு இருக்கும். இதன்காரணமாக மீன்வளத்தை பெருக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்துறை சார்பில் வைகைஅணை நீர்தேக்கத்தில் புதிதாக மீன்குஞ்சுகள் வளர்ப்புக்கு விடப்படும்.
இந்த ஆண்டு வைகை அணையில் புதிதாக 16 லட்சம் மீன் குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக நிகழாண்டில் வைகை அணை மீன்வளத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் 9 லட்சம் நுண்மீன்குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதில் 45 நாட்கள் வளர்ச்சியடைந்த சுமார் 3 லட்சம் மீன் குஞ்சுகள் வைகை அணை நீர்தேக்கத்தில் விடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. புதிதாக மீன்கள் விடப்பட்டுள்ளதால், மீனவர்கள் சிறிய துளையுடைய வலைகளை மீன்பிடிக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் மீன்வளத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து வைகை அணை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பேசினோம்.” வைகை அணையில் மீன்பிடி தொழிலில் 111 யூனிட்கள் உடன் மொத்தம் 222 பேர் ஈடுபட்டுள்ளனர். தற்போது முதல்கட்டமாக ரோகு மீன்குஞ்சுகள் விட்டுள்ளோம். ஒரேநேரத்தில் அதிக மீன்குஞ்சுகளை விடமுடியாது என்பதால் குறிப்பிட்ட இடைவெளியில் மீன்குஞ்சுகளை விட உள்ளோம்.
இங்கு இயற்கை முறையில் மீன்கள் வளர்வதால் சுவை அதிகமாக இருக்கும். எனவே தேனி மாவட்ட மக்களே பெரும்பாலான மீன்களை வாங்கிச் செல்கின்றனர். வாரத்தில் சனி, ஞாயிறு தவிர வார வேளை நாட்களில் மீன் பிடிக்கப்படும் குறைந்தபட்சம் 400 முதல் 500 கிலோ வரை மீன் கிடைக்கிறது. மீன் தேவை அதிகமாக இருப்பதால் மீன் குஞ்சுகளை அதிகமாக விட உள்ளோம்” என்றனர்.