புதுடெல்லி: இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் இருந்து கார்கில் மலைப்பகுதிக்கு சைக்கிள் பயணம் 2 பெண் அதிகாரிகள் தலைமையில் வீரர்கள் பயணம் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நினைவுகூறும் விதமாக, இந்திய ராணுவமும், விமானப்படையும் இணைந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க சைக்கிள் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.
டெல்லி முதல் டிராஸ் வரையிலான இந்த பயணம் நேற்று தொடங்கியது. ராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 20 வீரர்கள் அடங்கிய இந்தக் குழுவிற்கு, ராணுவ மேஜர் ஸ்ரிஷ்டி சர்மா மற்றும் விமானப்படையைச் சேர்ந்த ஸ்குவாட்ரன் லீடர் மேனகா குமாரி ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் தலைமையேற்றுச் செல்கின்றனர்.
டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னம் அருகிலிருந்து புறப்பட்ட இந்த சைக்கிள் பயணத்தை, ராணுவத்தின் சமிக்ஞை பிரிவு லெப்டினன்ட் ஜெனரல் எம்.யு. நாயர், விமானப்படையின் மேற்கு பிராந்திய தளபதி ஏர் மார்ஷல் ஆர்.ரதீஷ் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
சைக்கிள் பயணக் குழுவினர் 24 நாட்களில் மொத்தம் 1,600கி.மீ தொலைவுக்கு பயணம் செய்து, கார்கில் போரின்போது உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு தக்க மரியாதை செலுத்தும் விதமாக, கார்கில் போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ள டிராஸ் பகுதியை ஜுலை 26-ம் தேதி சென்றடைவர்.
இந்திய இளைஞர்களிடையே தேசப்பற்றை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் ஆகும். சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் குழுவினர், தங்களது பயணவழியில் உள்ள பள்ளிக்கூட குழந்தைகளுடன் கலந்துரையாட உள்ளனர்.