44-ஆவது செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடு பணிகள்: தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு

சென்னை: 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி (44th Chess Olympiad – 2022) தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் உயர் அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று (ஜூலை 3) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் 1.7.2022 அன்று சென்னை, காமராஜர் சாலையில், 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி (44th Chess Olympiad – 2022) குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னத்துடன் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு, மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டிகளின் ஒரு பகுதியாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டிக்கான விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பேருந்திலேயே பயணம் மேற்கொண்டு, இப்போட்டியில் பங்குபெற உள்ள போட்டியாளர்கள், பங்கேற்பாளர்கள் பயணிக்கும் வழித்தடங்களை ஆய்வு செய்தார். மேலும், மின்வாரியப் பணிகள், சுகாதாரப் பணிகள், உணவகம், வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கும் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, மாமல்லபுரம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் அமைப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினையும், பூஞ்சேரி பகுதியில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டிக்காக சர்வதேச தரத்தில் 52,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்படவுள்ள நவீன விளையாட்டு அரங்கத்தினையும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தின் மேம்பாட்டுப் பணிகளையும் தலைமைச் செயலாளர் பார்வையிட்டார்.

மாமல்லபுரத்தில் பகுதியில் உள்ள தாமரைக்குளத்தை பார்வையிட்டு, அதன் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் மாமல்லபுரம், பேருந்து நிறுத்தும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டிக்கான விளம்பரப் பணிகளைப் பார்வையிட்டார். மேலும், மாமல்லபுரம், கடற்கரை கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளையும், குளம் சீரமைப்புப் பணிகளையும் பார்வையிட்டார்.

இறுதியாக, சென்னை விமான நிலையத்தில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டிக்கு வருகை தரவுள்ள போட்டியாளர்களை வரவேற்று அழைத்துச் செல்லக்கூடிய வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

44ஆவது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டிக்கான இந்த ஆய்வின்போது, தமிழக அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள், துறை தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அலுவர்கள் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.