புதுடெல்லி: நாடு முழுவதும் 6 நாட்களுக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. தென் பருவமழை வழக்கமாக நாடு முழுவதும் ஜூலை 8ம் தேதி தொடங்கும். ஆனால், இந்தாண்டு பெரும்பாலான மாநிலங்களில் முன்கூட்டியே தொடங்கி விட்டது. ராஜஸ்தான், குஜராத்தில் மட்டும் மழை இல்லாமல் இருந்தது. நேற்று முன்தினம் முதல் இங்கும் பருவ மழை பெய்ததால், தென்மேற்குப் பருவமழை சாதாரண தேதிக்கு 6 நாட்களுக்கு முன்பாகவே நாடு முழுவதும் தொடங்கி விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 4 வார இடைவேளைக்கு பின்னர் கேரளாவில் தற்போது மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வரும் 5ம் தேதி வரை கேரளா முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் வரும் 4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.