புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை அடுத்த வாரம் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முப்படைகளில் 4 ஆண்டு கால குறுகிய சேவையாக பணியாற்றுவதற்கான அக்னிபாதை ஆட்சேர்ப்பு திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த மாதம் 13ம் தேதி அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ்தான் இனி முப்படைகளுக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது. இருப்பினும் அக்னிபாத் திட்டத்தின்படி ஆள் சேர்க்கும் தேதியை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில், அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், இதுதொடர்பாக நடந்த போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்கள் சேதமாவதை கண்காணிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என்றும், அக்னிபாதை திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர்கள் விஷால் தீவாரி, எம்.எல்.ஷர்மா மற்றும் ஹர்ஷ் அஜய்சிங் ஆகியோர் தொடர்ந்த மூன்று மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதே விவகாரத்தில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என ஒன்றிய அரசு தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே, மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் மகேஸ்வரி ஆகியோர் அமர்வில் நேற்று ஆஜராகி, ‘‘அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும்’’ என வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், ‘‘வழக்கை அடுத்த வாரம் பொருத்தமான அமர்வில் பட்டியலிட்டு விசாரிக்கிறோம்’’ என உத்தரவிட்டார். இதற்கிடையே, வரும் 18ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் காரசார வாதங்களை முன்வைக்க தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.