குவாஹாட்டி: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு 200 கிலோ அம்ரபாலி மாம்பழத்தை பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாசார்பில், அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள அந்நாட்டு துணைத் தூதர் ஷா முகமது தன்விர் மான்சுர், முதல்வரின் முதன்மைச் செயலாளர் சமிர் கே.சின்ஹாவிடம் கடந்த 1-ம் தேதி மாம்பழங்களை ஒப்படைத்தார். கடந்த ஆண்டும் இதேபோல ஷேக் ஹசீனா, சர்மாவுக்கு மாம்பழங்களை அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து வங்கதேச துணைத் தூதர் மான்சுர் கூறும்போது, “எங்கள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் தலைமையின் கீழ் இரு நாடுகளுக்கிடையே சிறப்பான நல்லுறவு நிலவுகிறது. இதில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா முக்கிய பங்கு வகிக்கிறார். எங்கள் நாட்டில் விளையும் மாம்பழங்களில் மிகவும் சிறப்பான ரகம் அம்ரபாலி. இதை பக்கத்து நாடுகளின் தலைவர்களுக்கு வழங்க வேண்டும் என எங்கள் பிரதமர் விரும்புகிறார். இதன்படி பழங்களை வாங்கி உள்ளோம். இந்த மாம்பழங்கள் இரு தலைவர்களுக்கிடையிலான உறவை இனிமையானதாக்கும்” என்றார்.
மாம்பழங்களை பெற்றுக்கொண்ட முதல்வரின் முதன்மைச் செயலாளர் சமிர் கே.சின்ஹா கூறும்போது, “வங்கதேச பிரதமர், முதல்வருக்கு பரிசாக அனுப்பி வைத்தமாம்பழங்களை பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாடுகளுக்கிடையிலும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலும் உள்ள வலிமையான உறவை வெளிப்படுத் துவதாக இது அமைந்துள்ளது” என்றார்.