ஹைதராபாத்: பாஜக செயற்குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது. நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளை மக்கள் மூலையில் உட்கார வைத்துவிட்டனர். அடுத்து வரும் 30 முதல் 40 ஆண்டுகள் வரை மத்தியில் பாஜக கூட்டணியே ஆட்சி நடத்தும். சாதி அரசியல், வாரிசு அரசியல், வாக்குவங்கி அரசியலுக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தெலங்கானா, மேற்குவங்கத்தில் பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும். இந்த இரு மாநிலங்களிலும் குடும்ப ஆட்சி ஒழிக்கப்படும். கேரளா, ஆந்திரா, ஒடிசாவில் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பான வியூகங்களை கட்சித் தலைமை வகுத்து வருகிறது.
குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி குற்றமற்றவர் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அரசமைப்பு சாசனத்தின் மீது பிரதமர் நம்பிக்கை வைத்துள்ளார். குஜராத் கலவர வழக்கின்போது சிறப்பு விசாரணைக் குழுவின் முன்பு மோடி ஆஜராகி விளக்கம் அளித்தார். அவர் எந்த நாடகமும் ஆடவில்லை. ஆனால், இப்போது ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடகமாடி வருகின்றனர். சத்தியாகிரக போராட்டம் நடத்துகின்றனர்.
காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்க காங்கிரஸ் சதி செய்கிறது. மக்கள் நலனுக்காக மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் அந்த கட்சி தவறான அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை அழித்தது, உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியது என மத்திய அரசு பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. பாஜகவில் உள்கட்சி ஜனநாயகம் பின்பற்றப்படுகிறது. ஆனால்,காங்கிரஸில் கட்சித் தலைவர் தேர்தலை நடத்தக்கூட அஞ்சுகின்றனர். ‘மோடி போபியா’ (அச்சம்) என்ற நோயால் காங்கிரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.