அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஜூலை 6ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையைத் தேர்வு செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை ஜூலை 6ஆம் தேதி (தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்கு உட்பட்டு) விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரிக்கக் கோரி பட்டியலிட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன், சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், நீதிபதிகள் ஒருவரின் இல்லத்தில் நள்ளிரவில் வழக்கத்திற்கு மாறான அமர்வை நடத்தி, பொதுக்குழு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற விடாமல் தடுக்கும் வகையில் அதிகாலை 4 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு அரசியல் கட்சியின் உள் செயல்பாடுகளில் நீதித்துறை தலையீடு செய்வதாகும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால உத்தரவை மீறியதாகக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை இன்று சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வருவதாகவும் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் கூறினார்.
அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற தடை விதித்து நீதிபதி சுந்தர் மோகன், நீதிபதி துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜூன் 23ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சிறப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர் எம்.சண்முகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இரட்டைத் தலைமையாக செயல்பட்டு வந்தனர்.
அண்மையில், அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஒரு பெரும் புயலே வீசி வருகிறது. இதில், எடப்பாடி பழனிசாமியும் அவருடைய ஆதரவு முகாமும் ஒற்றைத் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதில், இ.பி.எஸ்-சின் கை உயர்ந்து காணப்படுகிறது. ஆனால், ஓ. பன்னீர்செல்வம் ஒற்றைத் தலைமைக்கு எதிராக குரல்கொடுத்து வருகிறார். மேலும், பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
கடந்த ஜுன் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இரட்டைத் தலைமையை ஒழித்து, ஒற்றைத் தலைமையைக் கொண்டுவர வேண்டும் என இ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஜூலை 6 ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“