`அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரி தனி நீதிபதியை அணுகலாம்’-நீதிமன்றம் அறிவுறுத்தல்

23-ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டுமே உத்தரவு பொருந்தும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 23-ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர புதிய முடிவுகள் எடுக்க தடை கேட்டு பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, `பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த நீதிமன்றம் யூகித்து முன்கூட்டியே உத்தரவு பிறப்பிக்க முடியாது’ என்றும் `கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை’ என்றும் கூறி பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி வழங்கினர்.
image
இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பினர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணை நடைபெற்றது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், `ஜூன் 23-ல் திட்டமிட்டபடி பொதுக்குழு நடத்தலாம், அதில் 23 தீர்மானம் மட்டும் நிறைவேற்றலாம், மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாமே தவிர எந்த முடிவும் எடுக்கக்கூடாது’ என உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக பொதுக்குழு உறுப்பினர் சி.வி.சண்முகம் அறிவித்தார். மேலும், நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானத்தை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். அதனை, பொதுக்குழு உறுப்பினர்கள் டி.ஜெயக்குமார் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் வழிமொழிந்தனர். இதையடுத்து, அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.
image
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், `உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதை வழிமொழிந்த டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் தண்டிக்க வேண்டும்.
தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதே நீதிமன்ற அவதிப்பாக உள்ளபோது, அடுத்தப் பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அவர் அறிவித்தது மன்னிக்க முடியாத செயலாகும். நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கான சதித்திட்டத்தை வெளிப்படுத்கிறது. நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கவும். கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்காததால், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார்.
image
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, ஏற்கெனவே ஒருமுறை விசாரணைக்கு வந்து, பின் அது ஒத்திப்போனது. அது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “அன்று நள்ளிரவு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் 23ஆம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும். ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவேண்டும் என இந்த முறையீட்டில் கோரிக்கை வைக்கமுடியாது. ஏனெனில் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தொடர்பாக மட்டுமே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கும் அமர்வு விசாரிக்க முடியும். மேற்கொண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி தனி நீதிபதியை அணுகவும்” என நீதிமன்றம் தீர்ப்பளித்தது
தொடர்ந்து வழக்கு விசாரணை ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.