EPS camp prepares ADMK general council meeting, OPS supporters denies: வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி நடக்கவுள்ள அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகளில் இ.பி.எஸ் தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது.
அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் காரணமாக, ஜூன் 23 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம், தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல், சலசலப்புடன் நிறைவடைந்தது. இதனிடையே, ஒற்றை தலைமை கோரிக்கையை நிறைவேற்ற எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு முனைப்பு காட்டி வருகிறது.
இதையும் படியுங்கள்: இடத்தை வழங்குங்கள்… கமல்ஹாசனுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் நோட்டீஸ்
அதன்படி, ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற, வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு இ.பி.எஸ் தரப்பு அழைப்பு விடுத்துள்ளது. அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என கூறி வருகிறது. இதனால் இந்த விவகாரம், நீதிமன்றங்கள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன் சென்றுள்ளது.
இந்த நிலையில், ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க சிறப்புப் பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள இ.பி.எஸ் தரப்பு, முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா கடந்த காலங்களில் கட்சியின் உயர்மட்டக் கூட்டங்களை நடத்திய வானகரத்தில் இம்முறையும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. ஜூன் 23ம் தேதி இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அணிகளுக்கு இடையே கடும் பிளவு ஏற்பட்டபோதும் கூட கூட்டம் அங்கு தான் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் மண்டபத்திற்கு வெளியே இருக்கை ஏற்பாடுகள் நடைபெற்று வரும் இடத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த, முன்னாள் அமைச்சரும் இ.பி.எஸ் ஆதரவாளருமான நத்தம் விஸ்வநாதன், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை பார்வையிடுவதற்காக,தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவரும் இங்கு வந்து பார்வையிட்டோம். வருகின்ற 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி வெகு சிறப்பாக எழுச்சியோடு நடைபெறும்.
முந்தைய பொதுக்குழு கூட்டத்திற்காக வரைவு செய்யப்பட்ட 23 தீர்மானங்களில் சிலவற்றைத் தவிர அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும். குறிப்பாக மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு என்னென்ன அதிகாரங்கள் இருந்ததோ, அந்த அனைத்து அதிகாரங்களும் அடங்கிய பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, அப்பதவிக்கு, முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை அந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 99 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு இ.பி.எஸ்-க்கு உள்ளது. அதேநேரம் ஓ.பி.எஸ்-க்கு 1% மட்டுமே ஆதரவு உள்ளது.
இந்த பொதுக்குழு நடக்காது என்று, ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியிருக்கிறார். அவர் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான தகவலைக் கூறியுள்ளார். இந்த பொதுக்குழு சட்டப்படி நடைபெறும். சட்ட விதிகளுக்குட்பட்டு நடைபெறும் பொதுக்குழுவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அத்தனையும் செயல்படும்” என்று அவர் கூறினார்.
அதேநேரம், பொதுக்குழு கூட்டத்தை நடத்த வாய்ப்பே இல்லை என ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஆர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். மேலும், “கட்சியின் பொருளாளராக இருக்கும் ஓ.பி.எஸ் தான், கட்சி மற்றும் சின்னத்திற்கு பொறுப்பாளராக இருக்கிறார், மேலும் கூட்டத்தை நடத்தும் அதிகாரம் அவருக்கு உள்ளது. கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதன் மூலம், இ.பி.எஸ் பிரிவு எதேச்சதிகாரமான முறையில் செயல்படுகிறது” என்று கூறினார்.
வழக்கமாக வானகரத்தில் உள்ள அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள மண்டபத்திலும், சாப்பாட்டு மண்டபம் செயற்குழு கூட்டத்துக்கும் பயன்படுத்தப்படும், ஆனால் இம்முறை மண்டபத்திற்கு வெளியே, கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.