தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல்துறையின் சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2020-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மத்திய பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்தார். அதன் முதல் கட்டமாக கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடந்துவருகிறது. இந்த அகழாய்வில் 70-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பினாலான பொருள்கள் ஆகியவை கண்டு பிடிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு 30 செ.மீ ஆழத்தில் தங்கத்தினால் செய்யப்பட்ட காதணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1902-ம் ஆண்டில் அலெக்சாண்டர் இரியா இங்கு அகழாய்வு செய்தார். அந்தக் காலகட்டத்தில் தங்கத்தினால் ஆன நெற்றிப் பட்டையம் கிடைத்துள்ளது. அதன் பின்னரே இங்கு பல அகழாய்வுகள் நடந்தன. கடந்த 2004 மற்றும் 2005-ம் ஆண்டில் இந்தியத் தொல்லியல்துறையின் சார்பில் டாக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் நடந்த அகழாய்வில் தங்கம் ஏதும் கிடைக்கவில்லை. கடந்த 2020-ல் தமிழகத் தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் தலைமையில் நடந்த அகழாய்விலும் தங்கம் ஏதும் கிடைக்கவில்லை.
ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள், மண் பாண்டங்கள், இரும்புப் பொருள்கள் ஆகியவை அதிக எண்ணிக்கையில் கிடைத்துவந்த நிலையில், தங்கம் கிடைத்துள்ளது தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருச்சி மண்டல அகழாய்வு இயக்குநர் அருண்ராஜ் கூறுகையில், “அலெக்சாண்டர் இரியாவின் அகழாய்வுக்குப் பிறகு 120 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத்தினால் செய்யப்பட்ட காதில் மாட்டும் காதணி கிடைத்துள்ளது. இதனால், தமிழகத்தின் தொன்மையையும், அவர்கள் பயன்படுத்திய உலோகப் பயன்பாட்டினையும் அறிய முடிகிறது.
இந்தக் காதணியை ஆய்வு செய்ததில் இதன் தரம், 20 காரட் தங்கம் என்பது முதல் கட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தக் காதணி குறித்து ஆய்வுகள் தொடரும்” என்றார். ஆதிச்சநல்லூரில் ஏற்கெனவே ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த சுண்ணாம்பினால் உருவாக்கப்பட்ட தரைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அதன் அருகில் சுண்ணாம்பு மற்றும் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வின் அறிக்கையில், ”சுமார் 3,000 ஆண்டுகள் பழைமையானது ஆதிச்சநல்லூர்” என்று கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்தத் தங்கமும், சுமார் 3,000 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், 3,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் நாகரிகத்துடனும், தங்கம் உபயோகிக்கும் அளவுக்கும் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையிலும் இருந்துள்ளான் என்பதையும் அறிய முடிகிறது.
3,000 ஆண்டுகள் முதல் ஆங்கிலேயர்கள் காலம் வரை இந்தப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இந்த அகழாய்வில் தொடர்ந்து கிடைத்துவருகின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்பு சங்ககால வாழ்விடப்பகுதி மற்றும் சங்ககால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.