மும்பை: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கட்சியின் கொறாடா உத்தரவை எதிர்த்து வாக்களித்ததால் அவர் பதவியிழக்கும் சூழல் உள்ளது.
மகாராஷ்டிராவில் பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 29-ம் தேதி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து கடந்த 30-ம் தேதி மாநிலத்தில் புதிய அரசை அமைத்தன. சட்டப்பேரவை பேரவைத் தலைவர் தேர்வு நடந்தது. இதில் பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட ராஜன் சால்விக்கு 107 வாக்குகள் கிடைத்தன.
இன்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ஆளும் பாஜக கூட்டணிக்கு 164 வாக்குகள் கிடைத்தன. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 144 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் ஷிண்டே தலைமையிலான அரசு 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து 99 எம்எல்ஏக்கள் மட்டுமே வாக்களித்தனர். அதாவது எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு நேற்று 107 வாக்குகள் கிடைத்த நிலையில் இன்று அது 99 ஆக குறைந்து விட்டது.
முக்கியமாக மகாராஷ்டிர காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அசோக் சவான் மற்றும் விஜய் வாடெட்டிவார் ஆகிய இருவரும் இன்று ஷிண்டே அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த பிறகு காலதாமதமாக சட்டப்பேரவைக்கு வந்தனர்.
நேற்று வாக்கெடுப்பின்போது வராமல் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஜீஷன் சித்திக், மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ தீரஜ் தேஷ்முக் மற்றும் தேசியவாத காங்கிரஸின் சங்ராம் ஜக்தாப் ஆகியோரும் இன்றும் வரவில்லை. சமாஜ்வாடியின் 2 எம்எல்ஏக்களும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் எம்எல்ஏ ஒருவரும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அனில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகியோர் ஊழல் வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 12 எம்எல்ஏக்கள் நேற்று பேரவைக்கு வரவில்லை.
இந்தநிலையில் சிவசேனாவின் 55 எம்எல்ஏக்களில் 40-க்கும் மேற்பட்டோர் ஷிண்டே அணியில் உள்ளனர். அதேசமயம் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அணியில் 15 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனையடுத்து சபாநாயகர் தேர்தல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனாவின் ஷிண்டே பிரிவைச் சேர்ந்த கொறடா பாரத் கோகவாலே கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொறடாவின் உத்தரவை மீறி சட்டப்பேரவைக்குள் வாக்களிக்கும் எம்எல்ஏக்களின் பதவியை பறிக்க வாய்ப்புண்டு. இதனை பயன்படுத்தி சிவசேனா கொறடா பாரத் கோகவாலே சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் பயந்து போன உத்தவ் தாக்கரே சிலர் இன்று ஷிண்டேவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனினும் அவர்கள் எண்ணிக்கை விவரம் வெளியாகவில்லை.
சிவசேனா கொறடாவின் புகாரையடுத்து உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட அதிருப்தி சிவசேனா எம்எல்ஏகளுக்கு விளக்கம் கோரி சபாநாயகர் ராகுல் நர்வேகர் நோட்டீஸ் அனுப்புவார் எனத் தெரிகிறது. பின்னர் அவர்கள் அளிக்கும் பதிலுக்குப் பிறகு அவர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கிறது. இதுபோல ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.