இமாச்சலப் பிரதேச மாநிலம், குலுவிலிருந்து சைன்ஞ் நோக்கி பள்ளி மாணவர்கள் உட்பட 40 பேரை அழைத்துக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது இன்று காலை 8:30 மணியளவில் ஜங்லா கிராமத்தின் அருகில் சென்றபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. பேருந்தில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, விபத்து அருகிலிருந்த கிராமவாசிகள் காவல்துறைக்கு தகவலளித்தனர். மாவட்ட அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக குலு துணை ஆணையர் அசுதோஷ் கர்க், “சைஞ்ச் நோக்கிச் சென்ற பேருந்து காலை 8:30 மணியளவில் ஜங்லா கிராமத்தின் அருகே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது. பேருந்தில் 40 மாணவர்கள் வரை இருந்ததாகத் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனத் தகவல் தெரிவித்திருக்கிறார்.
இந்த விபத்து தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அலுவலக ட்விட்டர் பக்கத்தில், “இமாச்சலப் பிரதேச மாநிலம், குலுவில் நடந்த பேருந்து விபத்து நெஞ்சை உலுக்குகிறது. இந்த துயரமான நேரத்தில் என்னுடைய நினைவு விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களைக் குறித்ததாகவே இருக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது. உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.” எனப் பதிவிடப்பட்டிருக்கிறது.