யு-டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநங்கை புகார் அளித்தார்.
சென்னை போரூரை அடுத்த அய்யப்பன் தாங்கலைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் திருநங்கையுமான ஜெஸ்ஸி அரோரா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் யூடியூபர் பாரிசாலன் மீது புகார் ஒன்றை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசும்போது…, கடந்த வாரம் LGBTQ மக்கள் சுயமரியாதை பேரணி ஒன்றை நடத்தினோம். அந்த பேரணியை திமுக எம்.பி தமிழச்சி தங்க பாண்டியன் தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியை தவறாக புரிந்து கொண்ட பாரிசாலன் என்பவர் செங்கோல் யூடியூப் சேனலில் LGBTQ மக்களை மிகவும் கொச்சையாக பேசியிருப்பதோடு, LGBTQ மக்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் சமுதாயத்துடன் சார்ந்து வாழ முடியாது என தனிமனித உரிமையை பறிக்கும் வகையில் பேசியிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும் அரசு தங்களுக்கு பல உரிமைகள் வழங்கி இருப்பதை சலுகைகள் என கொச்சைப்படுத்தி இருப்பதாக கூறிய அவர், LGBTQ மக்களை அவதூறாக பேசிய யூடியூபர் பாரிசாலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக கூறினார்.
LGBTQ மக்களுக்கு உதவி புரியவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால், அவர்களை சக மனிதனாக பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM