மும்பை: எனக்கு ஆதரவு அளிக்கக் கோரி எந்தவொரு எம்எல்ஏவையும் நிர்பந்திக்கவில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நேற்று பேரவைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:
சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் கொள்கைகளின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா அரசு பதவியேற்றுள்ளது. இந்திய அரசியலில் இதற்கு முன்பு எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆளும் கட்சியில் இணைவது வாடிக்கையாக இருந்தது. மகாராஷ்டிராவில் ஆளும் அரசில் இருந்து எதிர்க்கட்சிகளுக்கு தலைவர்கள் மாறியுள்ளனர். கடந்த ஆட்சியில் நான் அமைச்சராக பணியாற்றினேன். நான் உட்பட பல்வேறு அமைச்சர்கள் அரசை விட்டு விலகி புதிய அரசை அமைத்துள்ளோம்.
எங்கள் அணியை சேர்ந்த எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருப்பதாக சிலர் (உத்தவ் தாக்கரே) கூறி வந்தனர். சுமார் 25 எம்எல்ஏக்கள் வரை தொடர்பில் இருப்பதாக ஊடகங்களுக்கு அவர்கள் பேட்டியளித்தனர். அனைத்தும் இன்று பொய்யாகி விட்டது.
எனக்கு ஆதரவு அளிக்கக் கோரி எந்தவொரு எம்எல்ஏவையும் நான் நிர்பந்திக்கவில்லை. அவர்களாகவே என்னோடு இணைந்திருக்கின்றனர். எங்களிடம் 50 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். பாஜகவில் 115 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனினும் பெருந்தன்மையுடன் எனக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் கொள்கைகளை உறுதியுடன் பின்பற்றுகிறேன். அன்றும் இன்றும் உண்மையான சிவசேனா தொண்டனாக செயல்படுகிறேன். முதல்வர் பதவியை நான் விரும்பவில்லை. விதியின் காரணமாக அந்த பதவியில் அமர்ந்துள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடியின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.