“ஒற்றைத்தலைமைதான் தேவை” என்று அதிமுகவில் ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருக்கிறது ஒரு தரப்பு. “இல்லை இல்லை… இரட்டை இலைபோல் இரட்டைத் தலைமைதான் தேவை” என்கிறது மற்றொரு தரப்பு.
அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே சர்ச்சை வெடித்துக்கொண்டிருக்கும் சூழலில், “எம்.ஜி.ஆர் காட்டிய வழியில் கழகத்தேர்தலை இபிஎஸ் – ஓபிஎஸ் சந்திக்க வேண்டும். எம்.ஜி.ஆரின் உயில்படி தொண்டர்கள் மட்டுமே தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும். இரட்டைத் தலைமை வேண்டுமென தீர்மானம் போட்டவர்களே, இப்போது ஒற்றைத் தலைமை வேண்டும் என்கின்றனர். எம்.ஜி.ஆர் எழுதிய உயில் நீதிபதி ஹரி பரந்தாமனிடம் உள்ளது. அதைவைத்து உச்சநீதிமன்றம் வரை செல்வேன்” என்று எம்.ஜி.ஆர் உயில் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன்.
“எம்.ஜி.ஆர் உயில் உங்களிடமா உள்ளது? கு.ப. கிருஷ்ணன் சொல்வது உண்மையா?” என்று ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமனைத் தொடர்புகொண்டு பேசினோம்,
“எம்.ஜி.ஆர் உயில் என்னிடம் இல்லை. இறப்பிற்குப்பிறகு சொத்துக்களை நிர்வகிக்க உயிலை எழுதிய வழக்கறிஞர் என்.சி ராகவாச்சாரியையும் அவருக்குப்பிறகு வளர்ப்பு மகளான லதாவின் கணவர் ராஜேந்திரனையும், இந்த இருவருக்கும் அடுத்ததாக, நீதிமன்றம் நியமிக்கும் நபர் தனது சொத்துக்களை நிர்வகித்து அறக்கட்டளையின் மூலம் நல்ல காரியங்களைத் தொடரவேண்டும் என்று உயில் எழுதி வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். தொண்டர்களும் பொதுமக்களும் எம்.ஜி.ஆருக்கு நிறைய சொத்துகள் இருக்கும் என்று நினைக்கலாம்.
உண்மையில் அவருக்கு மிகக் குறைந்த சொத்துக்களே உள்ளன. ராமாவரம் சொத்து, சத்யா கார்டன்ஸ், தி நகர் வீடு, ஆலந்தூர் மார்கெட் பில்டிங், சத்யா ஸ்டுடியோ இந்த ஐந்தும்தான் எம்.ஜி.ஆர் உயிலில் இருந்த சொத்துக்கள். இதில், சத்யா ஸ்டுடியோவை மட்டும் தனது மறைவிற்குப்பின்னர் கட்சி உடையாமல் இருந்தால் கட்சிக்கும், உடைந்தால் தன்னுடைய நினைவிடத்தை பாதுகாக்கும் அறக்கட்டளைக்கும் செல்லவேண்டும் என்று எழுதி வைத்தார்.
அவர், எழுதி வைத்த உயில்படி என்.சி ராகவாச்சாரியும் இறந்துவிட்டார். ராஜேந்திரனும் கடந்த 2014-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதனால், ராஜேந்திரன் குடும்பத்திற்குள்ளேயே, அவரின் மறைவுக்குப்பின் பிரச்னையாகி, வழக்கு நீதிமன்றம் வந்தது. “உயில்படி எம்.ஜி.ஆரின் சொத்துக்களை சொந்தம் கொண்டாட யாருக்குமே உரிமை கிடையாது” என்று தீர்ப்பளித்ததோடு எம்.ஜி.ஆர் சொத்துக்களை நிர்வகிக்க கடந்த 2016-ம் ஆண்டு என்னை நியமித்து உத்தரவிட்டார், நீதிபதி சுந்தரேஷ். இதனை எதிர்த்து ராஜேந்திரனின் மனைவி லதா ராஜேந்திரன் மேல்முறையீடு செய்தார். ஆனால், `நீதிபதி சுந்தரேஷ் உத்தரவு சரி’ என்று தீர்ப்பு வழங்கியது நீதிமன்ற அமர்வு.
இதனையும் எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று இடைக்கால தடை வாங்கியுள்ளார் லதா ராஜேந்திரன். தற்போதும், எம்.எஜி.ஆர் சொத்தை நிர்வகிக்கும் வழக்கு உச்சநீதிமன்றத்தில்தான் உள்ளது. இந்த வழக்கில் நான் தலையிடவில்லை. வழக்கின்போது உயில் காப்பியை மட்டும் எடுத்துப் படித்தேன். ஆனால், உயில் என்னிடம் கிடையாது. வழக்கின் நகல் காப்பி இருக்கிறது. அவ்வளவுதான்.
அப்போது, ஜெயலலிதா உயிருடன்தான் இருந்தார். அவரும் இதில் தலையிடவில்லை. வழக்கு முடிந்தால்தான் எம்.ஜி.ஆர் உயிலை நான் நிர்வகிக்கிறேனா? இல்லையா என்பது தெரியும். அவரது உயிலில் கட்சித் தலைவரை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றி இல்லை. சொத்துக்களை எவர் பராமரிக்க வேண்டும் என்றும், எதற்காக சொத்துக்கள் பயன்படுத்தப்படவேண்டும் என்று மட்டுமே கூறியுள்ளார். அவரது உயில் சென்னை உயர்நீதிமன்றத்தில், அவருடைய குடும்பத்தினருக்குள் சொத்து தொடர்பாக நடந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டது. எனவே, உயில் என்னிடம் இல்லை” என்கிறார், ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன்.