கொழும்பு,-இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, மூடப்பட்டு உள்ள பள்ளிகளை திறக்கும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை, கடுமையான அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி தவித்து வருகிறது.எண்ணெய் நிறுவனங்களுக்கு உரிய நிலுவையை வழங்காததால், அவை எரிபொருளை வழங்க மறுக்கின்றன. இதனால், பொது போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அரசு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
எரிபொருள் தட்டுப்பாட்டால் பள்ளிகள் இரு வாரங்களுக்கு மூடப்பட்டன. நேற்று பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவற்றை 8ம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், எரிசக்தி துறை அமைச்சர் காஞ்சனா விஜிசேகரா கூறியதாவது:அன்னியச் செலாவணி கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது. இதனால் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த, 20 லட்சம் பேருக்கு, வங்கி வாயிலாக பணம் அனுப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 4 கோடி கிலோ டீசல் உடன், கப்பல் ஒன்று, 8ம் தேதி கொழும்பு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, 22ம் தேதி மேலும் ஒரு கப்பலில், பெட்ரோல் வர உள்ளது. ரஷ்யா, மலேஷியா நாடுகளிடம் பெட்ரோல், டீசல் சப்ளை செய்யும்படி கேட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement