கொழும்பு: இலங்கையில் இன்று (ஜூலை 4) பள்ளிகள் தொடங்கவிருந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மேலும் ஒரு வாரத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. எரிபொருள், உணவுப்பொருள் தட்டுப்பாடு, மின்சார, மருத்துவ சேவையில் சிரமம் என பலவகைகளிலும் அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் கடந்த சில நாட்களாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இன்று (ஜூலை 4) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு தொடர்வதால் இலங்கையில் இன்று முதல் மேலும் ஒருவாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் பள்ளிகளுக்கு மாணவகள், ஆசிரியர்கள் செல்லும் அளவிற்கு போதிய வாகன வசதி இல்லாததால் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை அரசு, விடுபட்ட பாடங்களை அடுத்து வரும் விடுமுறை காலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. எரிபொருள் பிரச்சினையால் கடந்த மாதமும் பள்ளிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் மூடியிருந்தன. இந்நிலையில் இலங்கை கல்வித் துறை செயலர் நிஹால் ரன்சிங்கே, “பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுக்குமாறு கூறியுள்ளார். பள்ளிகள் இயங்க விரும்பினால் மாணவர்கள், ஆசிரியர்களின் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் அவர்களை வரச்செய்யலாம் என்றார். அதேபோல் மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்க ஏதுவாது காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக” கூறியுள்ளார்.
இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து கண்டிராத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஆனாலும் இலங்கையில் இன்னும் நெருக்கடிகள் குறைந்தபாடில்லை. மக்கள் போராட்டமும் ஓயவில்லை. இந்நிலையில் அடுத்தடுத்து பள்ளிகள் விடுமுறை நீட்டிக்கப்பட்டு வருவது அந்நாட்டு மாணவச் செல்வங்களில் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இலங்கைக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. கடைசியாக இந்திய உதவி ஜூன் 22ல் இலங்கை சென்று சேர்ந்தது. அதுவும் முடிந்துவிட்ட நிலையில் இலங்கை பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. ரஷ்யா, மலேசிய நாடுகளிடம் எரிபொருள் உதவி கோரியுள்ளது. மேலும், இலங்கை அரசு வெளிநாடு வாழ் இலங்கை மக்கள் உள்நாட்டு சொந்தங்களுக்கு நிதியுதவி செய்யுமாறும் கோரியுள்ளது.