எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்களை சீர்குலைத்தது யார்? என்ற தலைப்பில் அண்மையில் வெளியான செய்தியை சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸின் தலைவர் ஆர்.எம்.மணிவண்ணன் மறுத்துள்ளார்.
குறித்த செய்தி தவறானது என்றும், எனவே அந்தக் கட்டுரையில் உள்ள குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரிப்பதாகவும் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல வர்த்தகர் ஆர்.எம்.மணிவண்ணன் மீது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தவறுதலாக நம்பிக்கை வைத்ததன் காரணமாகவே எரிபொருள் நெருக்கடியை தீர்க்க முடியவில்லை என ஸ்ரீலங்கா மிரர் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
சுப்ரீம்சாட் திட்டத்திற்கு நிதியுதவி
எரிபொருளை இறக்குமதி செய்ய கடன் பத்திரங்களை திறப்பதாக முதலில் மணிவண்ணன் உறுதியளித்ததாகவும், பின்னர் டொலர் இல்லாமல் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாது என்று கூறியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் முழு திட்டமும் பொய்த்து போனதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருந்ததாக ஸ்ரீலங்கா மிரர் குறிப்பிட்டிருந்தது.
பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் மணிவண்ணன் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோஹித ராஜபக்சவின் ‘சுப்ரீம்சாட்’ திட்டத்திற்கு நிதியளித்தவர் எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே குறித்த செய்தியை மறுத்து அவர் மணிவண்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.