புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா ஆட்டுச் சந்தையில் பக்ரீத் குர்பானிக்கான ஆடு விற்பனை களை கட்டியுள்ளது. அங்கு ஒரு ஆட்டின் விலை ரூ.1.05 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் தங்கள் விலை உயர்ந்த ஆடுகளுடன் விற்பனைக்கு குவித்துள்ளனர். இதனால் விற்பனை சூடுபிடித்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இறைவன் பெயரில் ஆடுகள் அதிக அளவில் குர்பானி கொடுக்கப்படுகிறது.
இதற்காக, உ.பி.,யின் ஆக்ரா சந்தைக்கு அண்டை மாநிலங்களான டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்ராகண்ட் ஆகியவற்றிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
இந்தச் சந்தையில் ஆடுகளின் விலை குறைந்தது ரூ.25,000 முதல் மூன்று லட்சம் வரை இருந்தது. இவற்றில், பார்பரா எனும் ஆடுகள் இனவகைக்கு வாடிக்கையாளர்கள் இடையே அதிக ஆர்வம் இருந்தது.
இந்த பார்பரா ஆடுகளின் விலை குறைந்தது ரூ.1 லட்சம் ஆகும். இதில், அதிக விலையாக பார்பரா இனவகை ஆடு ஒன்று ரூ.1-05 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
இது குறித்து ருர்கியின் ஆடு விற்பனையாளரான ஜாபர் கூறும்போது, ‘தோடாபாரி, மூல்தான், கேப்டன், சுல்தான் ஆகிய உயர்ந்த இனவகை ஆடுகளை நான் விற்பனைக்கு கொண்டு வந்தேன்.
இதில், மூல்தான் ரூ.3.29, சுல்தான் ரூ.3.40 ஆகிய ஆடுகள் அதிக விலையால் எவரும் வாங்கவில்லை. கேப்டன் இனவகை ஆடுகள் மட்டும் ரூ.1 லட்சம் விலைக்கு வாங்கப்பட்டது.’ எனத் தெரிவித்தார்.
கரோனா பரவல் காலத்திற்கு பின் இந்த வருடம் பக்ரீத்திற்கான குர்பானி ஆடுகள் விற்பனை சற்று அதிகரித்திருப்பதாகக் கருதப்படுகிறது. ஆக்ராவை போல், உ.பி.,யின் பல்வேறு பகுதிகளுள்ள முக்கிய சந்தைகளிலும் ஆடுகள் விற்பனை தொடர்கிறது.