மதுரை அருகே கப்பலூர் டோல்கேட்டை அகற்றச்சொல்லி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போராட்டத்தில் ஈடுபட்டு, கைதான சம்பவம் திருமங்கலம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், கப்பலூரில் அமைந்துள்ள டோல்கேட் தென்மாவட்ட மக்களுக்கு முக்கியமானது. திருமங்கலம் நகராட்சி எல்லைக்கு அருகில் விதிகளை மீறி அமைக்கப்பட்ட டோல்கேட்டை எதிர்த்து அந்தப் பகுதி மக்கள் பல வருடங்களாகப் போராடி வருகிறார்கள். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று முதலில் சொல்வதும், பின்பு வாங்குவதும் டோல்கேட் நிர்வாகத்தின் வழக்கமாக இருப்பதால்… தொடர்ந்து இங்கு பிரச்சனை நீடித்துக்கொண்டே உள்ளது.
இதற்கிடையே 60 கி.மீட்டர் இடைவெளிக்குள் அமைக்கப்பட்ட டோல்கேட்டுகளை அகற்ற மத்திய அரசு ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது திருமங்கலம் பகுதி மக்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளைக் கணக்கிட்டு 7 நாள்களுக்குள் ரூ.228 கோடி கட்ட வேண்டும் என்று அந்தப் பகுதி வாகன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது டோல்கேட் நிர்வாகம். இதனால் மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
அதைத் தொடர்ந்துதான் கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வேண்டும் என்று தி.மு.க அரசை வலியுறுத்தி ஆர்.பி.உதயகுமார் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்று கைதானார். அவருடன் உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன், கப்பலூர் தொழிற்பேட்டை பேட்டை தலைவர் ரகுநாதராஜா, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கச் செயலாளர் செல்வம் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
கைதாகும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “60 கிலோ மீட்டர் இடைவெளிக்குள் உள்ள டோல்கேட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். அந்த வகையில் தென் தமிழ்நாட்டின் நுழைவுப் பகுதியாக உள்ள கப்பலூர் டோல்கேட்டை முன்னுரிமை அடிப்படையில் அகற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து சட்டமன்றத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன். மதுரை கலெக்டரின் கவனத்துக்கு பலமுறை எடுத்துச்சென்றேன்… ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளைக் கணக்கிட்டு 7 நாள்களுக்குள் ரூ.228 கோடி கட்ட வேண்டும் என்று இந்தப் பகுதி வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஒரு சிலருக்கு ஒரு கோடி ரூபாய், 80 லட்சம் என்றெல்லாம் தொகை குறிப்பிட்டுள்ளனர். அதையெல்லாம் ரத்து செய்ய வேண்டும்
எடப்பாடியார் தலைமையிலான ஆட்சியில் சுமுகமாகப் பேசி உள்ளூர் மக்களுக்கு உரிய அனுமதி பாஸ் வழங்கப்பட்டது. தற்போது அனுப்பியுள்ள நோடீஸால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல அரசு போக்குவரத்திற்கும் பல கோடியை கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கப்பலூர் தொழிற்பேட்டையிலுள்ள தொழில் முனைவோர்கள் இந்த டோல்கேட்டை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இக்கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது கொடைரோடு டோல்கேட், பாறைபத்தி டோல்கேட், சாத்தூர் டோல்கேட், சிட்டம்பட்டி டோல்கேட் ஆகியவை கப்பலூர் டோல்கேட்டிலிருந்து 60 கிலோ மீட்டருக்குள் உள்ளன.
ஆகவே மத்திய அமைச்சர் அறிவித்தபடி தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளோம். ஆனால் இதற்கு அரசு அனுமதி மறுக்கிறது. நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு கவனத்தில் எடுக்காத காரணத்தால் இன்றைக்கு மக்கள் எல்லோரும் சேர்ந்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளோம். ஆனால், இது வெளியே தெரியக்கூடாது என்று அரசு தடுக்கப் பார்க்கிறது
கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் எங்களை கைதுசெய்கின்றனர் நிச்சயமாக மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம்” என்றார்.