கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வீடுகளில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை தேசியக்கொடி ஏற்ற உத்தரவு.!

பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வீடுகளில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. பெங்களூரு இந்தியா சுதந்திரம் அடைந்து வருகிற ஆகஸ்டு 15-ந்தேதியுடன் 75-வது ஆண்டு ஆகிறது. இதையொட்டி இந்த ஆண்டு சுதந்திர தின பவள விழாவை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சுதந்திர தின பவள விழாவையொட்டி கர்நாடக உயர்கல்வி துறை மந்திரி அஸ்வத் நாராயண் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும், கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- 75-வது சுதந்திர தினத்தை அனைத்து தரப்பு மக்களும் உற்சாகமாக கொண்டாடும் வகையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன்படி 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ-மாணவிகள் அனைவரின் வீடுகளிலும் ஆகஸ்டு 11 முதல் 17-ந் தேதி வரை மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். மேலும் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் டி.சி.டி.இ.யின் கீழ் உள்ள அரசு, உதவி பெறும், உதவிபெறாத கல்லூரிகள், டிப்ளமோ கல்லூரிகள் நமது தேசியகொடியை ஏற்றி தங்கள் தேசிய பெருமையை வெளிப்படுத்த வேண்டும். இதுகுறித்து மாணவ-மாணவிகளுக்கு தெரியப்படுத்தவும், அந்தந்த கல்வி நிர்வாகங்கள், அறிவிப்பு பலகையில் தகவல்களை வெளியிட வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.