ஹோமாகம, மாகம்மன பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு வயது சிறுமியும் உயிரிழந்துள்ளதுடன், குறித்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்வடைந்துள்ளது.
சிறுவர்களுக்கான லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 06 வயதான ரிதுஷி ரணசிங்க நேற்று (03) உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை மூலம் கஹதுடுவ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜூன் 25 ஆம் திகதி இரவு கஹடுடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகம்மன பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது மூத்த சகோதரி ஆகியோரின் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்தில் தந்தை, தாய் மற்றும் அவர்களது இரண்டு மகள்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
47 வயதுடைய தந்தையும், 39 வயதுடைய தாயும் , 19 வயதுடைய மூத்த மகள் ஆகிய மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தனர்.