மும்பை: மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டேவின் தந்தை சாம்போஜி ஷிண்டே தாணே நகரில் காகித அட்டை தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாகவும் அவரது தாயார் கங்குபாய், வீட்டு பணிப்பெண்ணாகவும் வேலை செய்தனர்.
தாணேவின் கிசான் நகரில் ஏக்நாத் ஷிண்டே குடும்பம் வசித்தது. ஏழ்மை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலி வேலைகளுக்கு சென்றுவந்தார். ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்தார். மீன் கடையில் மீன்களை சுத்தம் செய்து கொடுக்கும் பணியையும் அவர் செய்திருக்கிறார்.
தாணே கிசான் நகர் பகுதியில் நீண்ட காலமாக நிலவிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவே ஏக்நாத் ஷிண்டே அரசியலில் கால் பதித்தார். ஆரம்பத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டராக இருந்த அவர், பின்னர் சிவசேனாவில் இணைந்து கவுன்சிலர் ஆனார்.
ஒருமுறை தாணேவின் கிசான் நகரில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. மாநகராட்சி ஊழியர்கள் வருவ தற்கு தாமதம் ஏற்பட்ட போது ஏக்நாத் ஷிண்டே களத்தில் இறங்கி குழாய் உடைப்பை சரி செய்தார். இதை அப்பகுதி மக்கள் இன்றும் நினைவுகூர்கின்றனர்.
ரேஷன் கடைகளில் பொருட்கள் இல்லை என்று புகார் எழுந்தால் மக்களை திரட்டி நேரடியாக உணவு கிடங்குக்கே சென்று ஷிண்டே போராட்டம் நடத்தியுள்ளார். மக்கள் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருந்த அவரது வாழ்வில் 2000-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி மிகப்பெரிய சோகம் ஏற்பட்டது.
ஏக்நாத் ஷிண்டே, அவரது மனைவி லதா, 2 மகன்கள், ஒரு மகள் ஆதிஓக் சதாரா பகுதி நீர்நிலையில் படகில் சென்றனர். அப்போது ஷிண்டேவின் 11 வயது மகன் திபேஷ், 7 வயது மகள் சுபாதா தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதன்பின், பல வாரங்கள் தனி அறையில் முடங்கி கிடந்தார்.
சிவசேனா மூத்த தலைவர் ஆனந்த் திக்கேவும் ஷிண்டேவின் மனைவி லதாவும் அவரை ஆறுதல்படுத்தினர். அரசியலில் இருந்து விலக நினைத்த ஷிண் டேவை மீட்டு மீண்டும் மக்கள் பணியில் ஈடுபட செய்தனர்.
ஏக்நாத் ஷிண்டே, லதா தம்பதியரின் ஒரே மகன் காந்த் ஷிண்டே மருத்துவம் படித்துள்ளார். கடந்தமக்களவைத் தேர்தலில் கல்யாண் தொகுதியில் காந்த் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.பி.யாக பதவி வகிக்கிறார்.