மும்பை: ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக வாக்களித்த சிவசேனா கட்சியின், உத்தவ்தாக்கரே ஆதரவு எம்எல்ஏக்களான ஆதித்ய தாக்கரே உள்பட பலரது எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளரான புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசேனா கட்சி கொறடா பாரத் கோகவாலேவின் உத்தரவை மீறி, ஏக்நாத் ஷிண்டேக்கு எதிராக வாக்களித்தால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதனால், அவர்களை பதவி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகர் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
உத்தவ்தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசான மகா விகாஸ் அகாதி அரசு கடந்த 29-ம் தேதி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து கடந்த 30-ம் தேதி மாநிலத்தில் புதிய அரசை அமைத்தன. அதைத் தொடர்ந்து, நடைபெற்ற சட்டப்பேரவை பேரவைத் தலைவர் தேர்தலில் பாஜகவைவைச் சேர்ந்த ராகுல் நர்வேகர் எம்எல்ஏ 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட ராஜன் சால்வி தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து கட்சியின் கொறடாவாக, ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளரான பாரத் கோகவாலே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா எம்எல்ஏக்கள், ஏக்நாத் சிண்டேக்கு ஆதரவாக வாக்களிக்க உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், ஆளும் பாஜக கூட்டணிக்கு 164 வாக்குகள் கிடைத்தது, இதனால் ஏக்நாத் அரசு வெற்றி பெற்றது. ஏக்நாத் ஷிண்டேவை எதிர்த்து, இன்றைய வாக்கெடுப்பில் 99 எம்எல்ஏக்கள் மட்டுமே வாக்களித்தனர். சபாநாயகர் தேர்தலின்போருது, 107 வாக்குகள் கிடைத்த நிலையில் இன்று அது 99 ஆக குறைந்து விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், இன்றைய வாக்கெடுப்பின்போது, உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் சிலர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆதித்ய தாக்கரே உள்பட சிலர் கொறடா உத்தரவை மீறி எதிராக வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவர்களின் பதவிகளை பறிக்க வேண்டும் என சபாநாயகரிடம் கொறடா தரப்பில் வலியுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், உத்தவ் தாக்கரே ஆதரவு எம்எல்ஏக்களில், சிலர் இன்று ஷிண்டேவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது உறுதியாகி உள்ளது.