கோவிட்-19 தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சென்னையில் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாம் தவணை பூஸ்டர் டோஸையும் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் பற்றி, சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம்…
“பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதால் நம் உடலில் ஏற்கெனவே இருக்கும் எதிர்ப்பு சக்தி இன்னும் அதிகமாகும். தடுப்பூசியின் முக்கியப் பணி உயிர் சேதத்தைத் தவிர்ப்பது. கோவிட் -19 மூன்றாம் அலை சமயத்தில் நோய்ப் பரவல் அதிகமாக இருந்தாலும் உயிரிழப்புகள் அதிகமாக இல்லை.
இதற்கு முக்கிய காரணம் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்ததே ஆகும். பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டபின் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் அது சாதாரண சளி போன்ற அறிகுறிகளுடன் குணமடைய வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் தற்போது இருக்கும் கோவிட்-19 திரிபுக்கு ஏற்றது போல தடுப்பூசிகளைத் தயாரிப்பதாகக் கூறுகின்றன.
புதிய திரிபுக்கு ஏற்ற வகையில் அப்டேட்டடு வெர்ஷனாக இந்தத் தடுப்பூசி டோஸ்கள் இருக்கும். அதனால் இவற்றை செலுத்திக் கொள்வதோடு, இப்போது இருக்கும் திரிபையும், இனிமேல் வரக்கூடிய புதிய திரிபு வகைக்கு எதிராகக்கூட பாதுகாப்பு பெற முடியும்.
அரசு தரப்பில் நடத்தும் தடுப்பூசி முகாம்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அனைவருக்கும் இலவசமாகவே செலுத்தப்படுகிறது. தற்போதுவரை இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுதவிர்த்து தனியார் மருத்துவமனைகளில் மூன்றாம் தவணை பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம். ஆனால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு கிடைப்பதில் நிலவும் சிக்கல்களே இதற்கு காரணமாக உள்ளது. நிறைய தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவதே நிறுத்தப்பட்டுவிட்டது.
தடுப்பூசியை வாங்குவது, அதற்கு ஒப்புதல் வாங்கி அதைப் பயன்படுத்துவது, தடுப்பூசி பற்றிய விவரங்களை உரிய போர்டலில் பதிவு செய்வது என ஏகப்பட்ட சிரமங்கள் உள்ளன. இவை அனைத்தையும் கருதியே கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்த சில மருத்துவமனைகள்கூட அதைக் கைவிட்டுவிட்டன.
தனியார் மருத்துவமனைக்கு தடுப்பூசி வழங்கப்படுவதில் அவ்வளவு முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. தடுப்பூசிகளை வாங்குவதே தனியார் மருத்துவமனைகளுக்கு சிரமமாக உள்ளது.
பூஸ்டர் டோஸ்களை தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக்கொள்ளும்போது அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்தான் வசூலிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது” என்றார்.
மத்திய அரசு கோவிட் 19 தடுப்பூசிகளான கோவிஷீல்டு ஒரு டோஸ் ₹225 எனவும், கோவாக்சின் ₹150 எனவும் விலை நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
மூன்றாம் தவணை தடுப்பூசி பற்றிய விவரங்களை, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவனையின் முதல்வர் மருத்துவர் தேரணிராஜனிடம் கேட்டோம். ” மூன்றாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் உடலில் கோவிட் வைரஸுக்கு எதிராகச் செயலாற்றும் ஆன்டிபாடிகள் (Antibodies) அதிகமாகும்.
கோவிட்-19 தொற்றை ஏற்படுத்தும் கிருமிக்கு எதிராகச் செயல்படும் ‘மெமரி செல்’களின் (Memory cells) எண்ணிக்கையும் உயரும். எனவே மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி உடையவர்கள் உடனே அதைச் செலுத்திக் கொள்ளலாம். அரசு தரப்பில் முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது” என்றார்.