பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டுவந்த முக்கிய நபரான அங்கித் சிர்ஸாவை டெல்லி போலீஸார் கைது செய்தனர். கூலிக்கு கொலை செய்யும் அங்கித் குறிவைத்து சுடுவதில் தேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அங்கித் சிர்ஸா மீது ஏற்கெனவே இரண்டு கொலை வழக்குகள் ராஜஸ்தானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யார் இந்து சித்து? சித்து மூஸ் வாலா பஞ்சாபில் மிகவும் பிரபலமான பாடகர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு இவர் காங்கிரஸில் இணைந்தார். ஆனால், அவர் பாடகராக உச்சம் தொட்ட நாளிலிருந்தே அவருக்கு பணம் பறிக்கும் கும்பல்கள் பல தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்தன.
இந்நிலையில், காரில் சென்று கொண்டிருந்த சித்து மூஸ் வாலாவை கடந்த மே 29ஆம் தேதி மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். சித்துவின் உடலில் இருந்து 25 புல்லட்டுகள் எடுக்கப்பட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்தப் படுகொலை குறித்து விரிவான விசாரணைக்கு முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டிருந்தார்.
தேடப்பட்டவர் கைது: இந்நிலையில், இந்தப் படுகொலை தொடர்பாக தேடப்பட்டவர்களில் முக்கிய நபராகக் கருதப்படும் அங்கித் சிர்ஸாவை நேற்றிரவு டெல்லி போலீஸார் கைது செய்தனர். இவர், லாரன்ஸ் பிஷ்ணோய் கோல்டி ப்ரார் குழுவைச் சேர்ந்தவர். அவரிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 9 மிமீ போர் பிஸ்டல், 10 லைவ் கேட்ரிட்ஜஸ், .30 மிமீ போர் கொண்ட ஒரு பிஸ்டல், பஞ்சாப் போலீஸ் சீருடைகள், இரண்டு மொபைல் ஃபோன்கள், ஒரு டாங்கிள், ஒரு சிம் கார்டு ஆகியன பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
சித்து மூஸ் வாலா கொலையில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படுபவர்களிலேயே அங்கித் சிர்ஸா தான் மிகவும் இளமையானவர். இவர் ராஜஸ்தானின் சூருவில் உள்ள மோசமான குற்றவாளிகளில் ஒருவரான சச்சின் பிவானி குழுவிடம் அடைக்கலம் புகுந்திருந்ததாகத் தெரிகிறது. லாரன்ஸ் பிஷ்ணோய் குழுவின் ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்தவர் பிவானி.
ஏற்கெனவே, கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்து கையெறி குண்டுகள், வெடிப் பொருட்கள், ரைபில் துப்பாக்கி ஆகியன கைப்பற்றப்பட்டன. இதுவரை இந்த வழக்கில் ப்ரியவர்த் என்ற ஃபவுஜி (26) காஷிஷ் (24), கேசவ் குமார் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.