‘சின்னவர் என்று என்னை அழைக்க சொல்லவே இல்லை’: உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

Udhayanidhi Stalin Tamil News: சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் கலைஞரின் 99வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதற்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளர் சந்திரன், வடக்கு பகுதி செயலாளர் குணாளன் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். இவ்விழாவில் 1600 திமுக மூத்த முன்னோடிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனை திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது நான் மிகவும் ராசிக்காரன் என்று சொன்னார். அதிலே எனக்கு நம்பிக்கை கிடையாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நான் சென்று பிரசாரம் செய்ததால் தான் வெற்றிபெற்றது போல் பேசினார்கள். அந்த வெற்றி முத்தமிழறிஞர் கலைஞருக்கு கிடைத்த வெற்றி. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. உங்களை போன்ற கழகத்தினரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

தி.மு.க.வில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை. நான் தான் உங்கள் அன்புக்கு அடிமை. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது, என்னை சின்னவர் என்று அழைக்க சொன்னதாக கூறினார். இருக்கிற பிரச்சினை போதாதா? நான் அப்படி சொல்லவே இல்லை.

என்னைப்பற்றி நிறைய கூட்டங்களில் பேசும்போது, ‘மூன்றாம் கலைஞர்’ ‘இளம் கலைஞர்’, ‘சின்ன கலைஞர்’ இப்படி என் மீதுள்ள அன்பு காரணமாக இப்படி பேசுகிறார்கள். அவர்கள் என்னை பெருமைபடுத்துவதாக நினைத்துக் கொண்டு கலைஞரை சிறுமைப்படுத்துறாங்க. கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டும் தான். ஒரே கலைஞர் தான்.

அதனால் என்னை சின்னவர் என்று கூப்பிடுங்கள் என்று சொன்னேனே தவிர நானாக போய் எல்லோரும் என்னை ‘சின்னவர்’ என்று கூப்பிடுங்கள், ‘சின்னவர்’ என்று கூப்பிடுங்கள் என்று சொன்னது போல் பேசிக்கிட்டு இருக்காங்க, நீங்களே என்னை புரிஞ்சுக்கல.

நான் பெரியாரை நேரில் பார்த்தது கிடையாது. பேரறிஞர் அண்ணாவை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் இங்குள்ள மூத்த முன்னோடிகள் நீங்கள் நேரில் பார்த்திருப்பீர்கள். நான் பார்த்தது எல்லாம் முத்தமிழறிஞர் கலைஞரையும், இனமான பேராசிரியர் தாத்தாவையும், நம்முடைய தலைவரையும் தான் பார்த்திருக்கிறேன். இவர்களை பார்த்து தான் நான் அரசியலை கற்றுக் கொள்கிறேன்.

நான் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு செல்லுகின்ற இட மெல்லாம் நன்கொடை வாங்கி கிட்டத்தட்ட இந்த 3 வருடங்களில் மட்டும் இளைஞரணி சார்பில் 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளோம். அதை இளைஞரணி அறக்கட்டளையில் வைப்பு தொகையாக வைத்து வருகிற வட்டியை கழக மூத்த முன்னோடிகளுக்கும், இளைஞரணி தம்பிமார்களுக்கும், அவர்களது கல்வி செலவு, மருத்துவ செலவுக்கு உதவி வருகிறோம்.

உங்களுக்கு என்ன தேவை என்றாலும் இளைஞரணி அலுவலகமான அன்பகத்துக்கு ஒரு கடிதம் கோரிக்கையாக தந்தால் அதை ஆய்வு செய்து இளைஞரணி சார்பாகவும் உங்களுக்கு உதவிகள் வந்து சேரும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.