கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் ஜூலை 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு 6-ந் தேதி (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 29-ந் தேதி முதல் கும்பாபிஷேக விழா தொடங்கி தினமும் பூஜைகள் நடந்து வருகிறது.
கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைத்தொடர்ந்து நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், அழகிய மண்டபம், தக்கலை ஆகிய 5 இடங்களில் இருந்து 4-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் திருவட்டாருக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, வரும் 6-ம் தேதி கன்னியாகுமரி மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.