சேலம்: ‘மாநிலம் முழுவதும் வனப்பரப்பினை அதிகரிக்க 2022-23-ஆம் ஆண்டில் 2.50 கோடி நாற்றுகள் நட்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள வனப்பரப்பினை அடுத்த 10 ஆண்டுகளில் 33 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் ‘பசுமை தமிழ்நாடு’ என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி செயல்படுத்தி வருகிறார். அதோடு, ‘ஈர நில மேம்பாட்டுத் திட்டம்’ மற்றும் ‘பருவ காலநிலை மாற்றத் திட்டம்’ போன்ற திட்டங்களையும் செயல்படுத்திட பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, இந்து சமய அறநிலையத் துறை ஆகியவற்றுடன் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களையும் இணைத்து செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் வனப்பரப்பினை அதிகரித்திட 2022-23-ஆம் ஆண்டில் 2.50 கோடி நாற்றுகள் நட்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலத்தில் டேனிஷ்பேட்டை, சித்தர் கோயில் வனத்துறை நாற்றுப் பண்ணையில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டி, பூங்காவை மேம்படுத்திட தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா கடந்த 1976-ம் ஆண்டு பொழுதுபோக்கு பூங்காவாக தொடங்கப்பட்டது.
இப்பூங்காவை மேம்படுத்தவும், இதன் வனப்பரப்பை 131.73 ஹெக்டராக அதிகரித்திட ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு இல்லாத உயிரினங்களை பிற வன உயிரியல் பூங்காக்களில் இருந்து கொண்டு வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2019-20-ம் ஆண்டில் 2.50 லட்சம் பார்வையாளர்கள் குரும்பப்பட்டி வனஉயிரியல் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர். 2020-21ம் ஆண்டு கரோனா காரணமாக 87 ஆயிரம் பேர் மட்டுமே வருகை தந்துள்ளனர். 2021-22-ம் ஆண்டில் 1.41 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
இனிவரும் ஆண்டுகளில் பார்வையாளர்களை அதிகரிக்க பூங்காவின் பரப்பை உயர்த்துதல், புதிய வன உயிரினங்களைக் கொண்டு வருதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பூங்காவில் தற்போது 24 வகையான 218 வன விலங்கினங்கள் உள்ளன. குறிப்பாக, குள்ளநரி, நீலகிரி லங்கூர், புள்ளி மான்கள், குரங்குகள், தேவாங்கு, மலைப் பாம்புகள், நட்சத்திர ஆமைகள், முதலைகள் போன்றவைகள் இங்கு உள்ளது. மேலும், புலி, சிறுத்தை, கரடி, காட்டு மான், நீர் பறவைகள் போன்ற இல்லாத இனங்களையும் கொண்டு வந்து சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று இடங்களில் வனத்துறையின் சார்பாக சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்காகவும், வனப் பரப்பை அதிகப்படுத்துவதற்கும் ஒரு கிராமப் பகுதியில் ஒரு ஹெக்டர் பரப்பளவில் மரகதப் பூஞ்சோலைகள் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.