தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என்று மிகப்பெரிய இலக்குடன் முக.ஸ்டாலின் அரசு இயங்கி வரும் நிலையில், இன்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 60 நிறுவனங்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
இந்தப் புதிய ஒப்பந்தத்தில் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுவது தமிழ்நாடு அரசு 11 பின்டெக் நிறுவனங்கள் உடன் செய்த ஒப்பந்தம் தான்.
தமிழ்நாடு அரசின் சிக்ஸர்.. செமிகண்டக்டர் சிப் உற்பத்தி செய்ய சிங்கப்பூர் IGSS ஒப்பந்தம்..!
பின்டெக் ஹப்
தமிழ்நாட்டை டெக் ஹப் ஆக மாற்றுவதைத் தாண்டி உலக நாடுகளுக்குத் தேவையான நிதியியல் சார்ந்த டெக் சேவைகளை அளிக்கும் தளமாகத் தமிழ்நாடு மாநிலம் மாற வேண்டும் என்பதற்காகப் பல மாத திட்டமிடலுக்குப் பின்பு முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2021ல் பின்டெக் கொள்கையை அறிமுகம் செய்தது.
11 பின்டெக் நிறுவனங்கள்
இதன் வாயிலாகத் தற்போது 11 பின்டெக் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையொப்பமிடப்பட்டன. மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் அலுவலகத்தை அமைக்கவும், வேலைவாய்ப்பு உருவாக்கவும் எனப் பல ஊக்க திட்டங்களும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஒப்பந்தம்
இன்றைய முதலீட்டாளர் கூட்டத்தில் பின் டெக் பிரிவில் VakilSearch, PrimeInvestor பைனான்சியல் ரிசர்ச், Qapita fintech, Flexibees பிஸ்னஸ் சர்வீசஸ், Simply Vyapar Apps, M2P Solutions, Gupshup, PayU, இன்போசிஸ், மாஸ்டர்கார்டு, போன்பே ஆகிய 11 நிறுவனங்கள் உடன் பின்டெக் துறையில் ஒப்பந்தம் செய்துள்ளது தமிழக அரசு.
1.25 லட்சம் கோடி ரூபாய்
சென்னையில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 60 புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் தமிழகத்திற்கு வரவுள்ளது, மேலும் இந்த முதலீட்டின் வாயிலாக 74,898 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
சிறந்த மாநிலம் – தமிழ்நாடு
திமுக அரசு பொறுப்பேற்ற பின் இதுவரை சுமார் 192 நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 2.20 லட்சம் கோடி ரூபாய் என முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசினார். இன்றைய கூட்டத்தில் தொழில் துவங்கச் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு அரசு 3வது இடத்தைப் பிடித்துள்ளதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக ஸ்டாலின் பேசினார்.
Tamilnadu govt Signed MoU with 11 Fintech companies includes Mastercard, phonepe, infosys, PayU
Tamilnadu govt Signed MoU with 11 Fintech companies includes Mastercard, phonepe, infosys, PayU தமிழ்நாடு அரசு: ஓரே நாளில் 1.25 லட்சம் கோடி.. 11 பின்டெக் நிறுவனங்கள் உடன் சிறப்பு ஒப்பந்தம்..!