திருக்கடையூர்: நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வயது 80 – சதாபிஷேக ஹைலைட்ஸ்!

80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி ஷோபா சிறப்பு யாகபூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீன பரிபாலனத்திலுள்ள ஸ்ரீ அபிராமி உடனுறையும் ஸ்ரீ  அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயனுக்கு ‘என்றும் 16’ வரம் வழங்கி சிவபெருமான் காலசம்ஹாரமூர்தியாக அருள்பாலிக்கும் இக்கோயில் ஆயுள்விருத்தித் தலமாகக் கருதப்படுகிறது. எனவே இங்கு பக்தர்கள் தங்கள் ஆயுள் விருத்திக்காக சஷ்டியப்தபூர்த்தி, உத்தரதசாந்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு யாகபூஜைகள் செய்து வழிபடுகிறார்கள். இதற்காகப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டினரும்  வருகிறார்கள். இத்தலத்தில் மட்டும்தான் ஆண்டு முழுவதும் இத்தகைய ஆயுஸ்யோகத் திருமணங்கள் நடைபெறும்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா

திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், அவர் மனைவி சோபா ஆகிய இருவர் மட்டும் நேற்று இந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தனர். எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு ஆயுள் விருத்திக்காக சதாபிஷேக ஹோமம் செய்து வழிபாடு செய்தனர்.

இதுபற்றி கோயிலின் கணேஷ குருக்களிடம் பேசினோம்.

“இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும், அவர் மனைவி ஷோபாவும் கோயிலுக்கு வந்தனர். கோயில் வாசலில் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மேளதாளத்துடன் அழைத்துச் சென்றோம். கோ பூஜை, கஜ பூஜை நடத்தி வைத்தோம்.

அதன்பின் 16 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மிருத்தியுஞ்ச் ஹோமம், ஆயுள்விருத்தி ஹோமம் சுதர்சன் ஹோமம், துர்கா, சப்தமி அஷ்டலட்சுமி, நட்சத்திர ஹோமம் நடத்தியபின், 16 கலசங்களிலுள்ள புனித நீர் தம்பதியினருக்குத் தெளித்தபின், சதாபிஷேக ஹோமம் நடத்தினோம்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா – சதாபிஷேகம்

தம்பதிகள் புத்தாடைகள் அணிந்து மாலைகள் மாற்றிக் கொண்டு கணபதி, சுவாமி, காலசம்ஹார மூர்த்தி, அபிராமி ஆகிய சந்ததிகளில் தரிசனம் செய்தனர். இறுதியாக  ஏராளமானோருக்கு அன்னதானம் செய்தபின் விடைபெற்றனர்” என்றார்.

இத்தகைய ஆயுள் விருத்தி ஹோம பூஜைகளை, பெற்றோருக்குப் பிள்ளைகள் செய்து வைத்து அவர்களின் ஆசிகளைப் பெறுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.