பொருளாதாரப் பிரச்சினைகளால் கல்வி சீர்திருத்தப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கல்வி சீர்திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் கல்விச் சீர்திருத்தங்கள் தொழில் சந்தைக்கும் உலகத்திற்கும் ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கல்வி சீர்திருத்தங்களில், இந்த நாட்டில் மனித வளத்தின் தேவையை முதலில் அடையாளம் காணப்பட வேண்டும்.
இந்த நாட்டில் அவ்வாறானதொன்று இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை. மலேசியா போன்ற நாடுகள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த நாட்டின் தேவையை அடையாளம் காண்கின்றனர். அதன்படி, அந்நாட்டின் கல்வியை தயார் செய்கின்றனர். ஏதாவது ஒரு தொழிலில் ஊழியர்கள் அதிகமாக இருந்தால் அவர்களை வெளிநாடு அனுப்புகின்றனர். நம் நாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, நனோ தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்த மனித வளத்தை தயார் செய்ய வேண்டும். அதற்காக நாம் மூன்று கட்டங்களாக செயல்பட தீர்மானித்துள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அரசாங்க சேவையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட 24,000 உத்தியோகத்தர்களும், ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் மேலும் கூறினார்