நிஜத்தில் கேஜிஎப் போல தான் வாழ்க்கை இருக்கிறது ; சமந்தா
பாலிவுட்டில் மிகப்பெரிய தயாரிப்பாளர் இயக்குனராக இருப்பவர் கரண் ஜோஹர். இதைத்தாண்டி இவரது காபி வித் கரண் என்கிற ரியாலிட்டி ஷோ ரொம்பவே பாப்புலர். பாலிவுட்டில் மட்டுமல்லாது ஹிந்தியில் தங்களது திரைப்படத்தை வெளியிடும் தென்னிந்திய படக்குழுவினர் கூட இவரது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது படத்தை புரமோஷன் செய்வது வழக்கம்.
அந்தவகையில் தற்போது காபி வித் கரண் சீசன் 7 நிகழ்ச்சி ஓடிடி வழியாக துவங்கியுள்ளது. இதன் முதல் நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா பங்கேற்றுள்ளார் என்பது சமீபத்தில் வெளியான ப்ரோமோ மூலம் வெளிப்பட்டுள்ளது.
கரண் ஜோஹரை பொருத்தவரை அனைத்து பிரபலங்களிடமும் கொஞ்சமும் யோசிக்காமல் அவர்களது திரை வாழ்க்கை, பர்சனல் வாழ்க்கை என வெளிபடையாக கேள்விகளை கேட்கக் கூடியவர். இப்படி இவர்கள் உரையாடும்போது சமந்தா, கரண் ஜோஹரிடம், “பல பேரின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாததற்கு காரணம் நீங்கள் தான்.. ஏனென்றால் நீங்கள் வாழ்க்கை 'கபி குஷி கபி கம்' அதாவது கே3ஜி போல என்று சொல்கிறீர்கள். ஆனால் நிஜத்தில் வாழ்க்கை கேஜிஎப் போலத்தான் இருக்கிறது” என்று ஜாலியாக கூறுவது போன்று அந்த புரோமோ வெளியாகி உள்ளது. இந்த எபிசோட் வரும் ஜூலை 7ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது..