மெரினா கடற்கரையில் திருமண போட்டோஷூட் நடத்திய போட்டோகிராபரை திடீரென தகராறு செய்து சிலர் வெட்டியுள்ளனர். மேலும் நடைபயிற்சி சென்ற பொதுமக்களை அவர்கள் ஆயுதங்களுடன் மிரட்டியுள்ளனர். இதுதொடர்பான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்து இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்துள்ளது காவல்துறை.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் இளமாறன் (வயது 23). இவர் திருமண நிகழ்ச்சிகளுக்கு போட்டோஷூட் எடுக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை இளமாறன் போட்டோஷூட் எடுப்பதற்காக மெரினா கடற்கரைக்கு வந்தார். இவரது நண்பர் தீபக் குமார் திருமண நாளை கொண்டாட தீபக்குமார் மனைவி சோனியா மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ், விஜய், பிரபா, கார்த்தி மொத்தம் 7 பேர் மெரினா கடற்கரை `நம்ம சென்னை’ பின்புறம் மணல் பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது அடையாளம் தெரியாத சிலர் அங்கு வந்து மணல் பரப்பில் அமர்ந்திருந்த இளமாறனிடம் `நீ எந்த ஏரியா’ என்று கேட்டு, அவருடைய செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். செல்போனை தர மறுத்தபோது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி உள்ளனர். இளமாறன் கையிலிருந்த செல்போனை பறிக்க முற்பட்டபோது, அவர் தராமல் இருக்க முற்பட்டுள்ளார்.
இதைக்கண்ட அவர்கள், கத்தியை எடுத்து இளமாறனின் இடது கையை வெட்டியுள்ளனர். இதனை கண்டு மெரினாவில் நடைபயிற்சி சென்றவர்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இளமாறன் அங்கிருந்து உயிர் தப்பித்து கண்ணகி சிலை எதிரே உள்ள பாரதி சாலை சென்றுள்ளார். இதற்கிடையே மெரினா போலீசாருக்கு அப்பகுதியிலிருந்தோர் தகவல் கொடுத்தனர்.
அவர்கள் இளமாறனை மீட்டு, சிகிச்சைக்காக ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவரை வெட்டியவர்கள் குறித்து மெரினா காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் கத்தியால் தாக்கி மொபைல் போனை பறிக்க முயன்ற பின்பு, அடையாளம் தெரியாத அந்நபர்கள் மெரினா கடற்கரை சாலையில் நடைபயிற்சி சென்ற பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இதனால் சிலர் பயந்து ஓடியுள்ளனர். அச்சத்தை ஏற்படுத்தும் அது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதனைவைத்து காவல்துறையினர் அந்த கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில் கத்தியுடன் அட்டகாசத்தில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஆனந்த், விழுப்புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், கண்ணகி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், மேலும் ஒரு நபர் என 4 பேரை மெரினா போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறையினர் 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் விசாரணையில், திருமண போட்டோஷூட் எடுப்பதற்காக, 6 நண்பர்களுடன் சேர்ந்து மெரினா, நம்ம சென்னை பின்புறம் மணற்பரப்பில் இளமாறன் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (எ) தோல் ஆனந்த் எந்த வித முன்விரோதமும் இல்லாமல் வேண்டுமென்றே எந்த ஏரியா? எனக் கேட்டு வீண் தகராறு செய்துள்ளார் என்பதும் அப்போது இளமாறன் தரப்பினருக்கும் ஆனந்த் (எ) தோல் ஆனந்த் தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கையால் இருதரப்பினரும் தாக்கிக்கொண்டதும் தெரியவந்தது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்த் (எ) தோல் ஆனந்த் அங்கு மணற்பரப்பிலிருந்த தனது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு வந்து, இளமாறனிடம் தகராறு செய்து கட்டை மற்றும் கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
2 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை பிடித்து, தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மெரினா பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் 2 காவல் ஆய்வாளர்கள், 20 காவல் ஆளிநர்கள் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் ஏற்கெனவே மெரினா பகுதியில் 4 ரோந்து வாகனங்கள், மற்றும் 20க்கும் மேற்பட்ட போலீசார் குற்றத்தடுப்பு மற்றும் நீரில் மூழ்கும் நபர்களை காப்பாற்றுவதற்காக பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
– செய்தியாளர்: சுப்பிரமணியன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM