நுபுர் சர்மா கைது செய்யப்பட வேண்டும்: ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்தல்

புதுடெல்லி: முஸ்லிம்களின் இறைத் தூதரை விமர்சித்த நுபுர் சர்மா, தேசத்தின் முன் மன்னிப்பு கோர வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. “இந்த மன்னிப்பு தேவையில்லை. மாறாக, அவர் கைது செய்யப்பட வேண்டும்” என ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் (ஜேஐஎச்) வலியுறுத்தியுள்ளது.

முஸ்லிம்களின் பழம்பெரும் அமைப்பாகக் கருதப்படுவது ஜேஐஎச். இதன் தலைமையகமான புதுடெல்லியில் அதன் தலைவரான சையது சதத்துல்லா ஹுசைனி, துணைத் தலைவர் பேராசிரியர் எஞ்சினியர் முகம்மது சலீம் ஆகிய நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.

இதில், இருவரும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதிலில் கூறியது: ”நுபுர் சர்மா மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஒரு தவறுக்கு தண்டனை என்பது மன்னிப்பு கோருவது எனில், நம் நாட்டில் நீதிமன்றங்களும் சிறைகளும் தேவையில்லை. தொலைக்காட்சி விவாதத்தில் மத விமர்சனம் செய்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் நுபுர் சர்மா கைது செய்யப்படவில்லை.

இந்த நடவடிக்கையால் சர்வதேச அளவில் இந்தியாவின் புகழ் குறைந்துள்ளது. மனித உரிமை ஆர்வலர்களான தீஸ்தா சீதல்வாட், குஜராத்தின் முன்னாள் டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோரின் கைது அதிர்ச்சி அளிக்கிறது. நுபுரின் விமர்சனத்தை பகிர்ந்தமைக்காக பத்திரிகையாளர் முகம்மது ஜுபைர் கைதாகியுள்ளார். இந்த கைது நம் நாடு எந்த திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

நுபுரின் தவறான விமர்சனத்திற்கு எதிராகப் போராடியவர்களின் குடியிருப்புகள் புல்டோசர்களால் இடித்து தள்ளப்படுவது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. மத வன்முறையை தூண்டிய அரசியல்வாதிகள், தொலைக்காட்சி நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

இவர்களது மத வன்முறை பேச்சுக்களின் தாக்கமாகத்தான் உதய்பூர் சம்பவம், மத்தியப் பிரதேசத்தின் ரட்லாமில் தவறான அடையாளத்தால் ஒரு மூத்த வயதுடைய இந்து கொல்லப்பட்டதும் காரணம். பல்வேறு மத நம்பிக்கைகளை நிந்தனை செய்பவர்களை தண்டிக்க சட்டம் இயற்றுவது முக்கியம். மத வன்முறையை தூண்டுபவர்களில் மதத்திற்கு ஏற்றபடி இரு வேறு நடவடிக்கைகள் ஏற்க முடியாதது.

எதிர்பாராதவிதமான நம் நாட்டின் அரசியல் சூழல், மத வன்முறையை தூண்டுகிறது. இதில் ஒரு பகுதி பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து மத வன்முறையைத் தூண்டும் கருவியாகிவிட்டனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.